Published : 16 Mar 2024 11:45 AM
Last Updated : 16 Mar 2024 11:45 AM
தமிழ்நாட்டில் போட்டியிட வைக்க திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை வீசுவதாகத் தெரிகிறது. தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக நடிகை ராதிகாவை போட்டியிட வைக்க முயற்சிக்கப்படுகிறது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிப்பு இன்று பிற்பகல் வெளியாக உள்ளது.
இந்த தேர்தலில் எப்படியாவது400 தொகுதிகளை பெற பாஜக தீவிரம் காட்டுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கணிசமானத் தொகுதிகளை பெற்றால்தான் 400-ஐ எட்ட முடியும் என்ற நிலை உள்ளது. இதற்காக, தனது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜக மிகவும் கவனம் செலுத்துகிறது.
இதில், மக்களிடையே பிரபல மானவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்துள்ளது. இதில், முக்கியமாக திரையுலக நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு வாய்ப்பளித்தால் சுற்றியுள்ள தொகுதிகளிலும் பலன் கிடைக்கும் என பாஜக எதிர்பார்க்கிறது. எனவே, தமிழகத்திலும் திரையுலகப் பிரபலங்களை போட்டியிட வைக்க தனது தமிழகப் பிரிவிடம் பாஜகவின் தேசியத் தலைமை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் பாஜகவின் தேசிய தலைவர்கள் வட்டாரம் கூறும்போது, “அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இணைந்ததன் பின்னணியில் ராதிகாவை எங்கள் கட்சியில் போட்டியிட வைக்கும் நோக்கமும் உள்ளது. அமேதியில் ஸ்மிருதி இரானியை நிறுத்தி, ராகுல் காந்தியை தோற்கடித்தது போல தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழியை தோற்கடிக்க கட்சி விரும்புகிறது.
ஆனால் ராதிகா, விருதுநகரில் போட்டியிட விரும்புகிறார். மேலும் ஓரிரு திரை நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது. தேர்தல் பிரச்சாரத்திலும் முக்கிய தமிழ் திரையுலகினர் ஈடுபட உள்ளனர்” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று கன்னியாகுமரியில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார உரை நிகழ்த்தினார். இவரது உரை முடிந்தவுடன் ராதிகா மற்றும் சரத்குமார் மேடையிலேயே பிரதமர் மோடியை சந்தித்தனர்.
பாஜகவின் உத்தேச வேட்பாளர் பட்டியலில் தூத்துக்குடியில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கே.எம்.ராதாகிருஷ்ணன், சசிகலா புஷ்பா ஆகியோரும் இடம் பெற்றுள்ளார். ராதிகா போட்டியிடவில்லை எனில் திமுக, மதிமுகவில் முக்கியத் தலைவராக இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
கூட்டணி கட்சிகள்: தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பேச்சுவார்த்தை முடியும் நிலையில் உள்ளது. இவர்களுக்கான தொகுதிப் பங்கீடு எந்நேரமும் அறிவிக்கப்படும் நிலை உள்ளது. வலிமையான வேட்பாளர்களை நிறுத்தும்படி கூட்டணிக் கட்சிகளிடமும் பாஜக வலியுறுத்தி உள்ளது. இதை ஏற்று கூட்டணிக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை பாஜகவுடன் இணைந்து தயார் செய்கின்றனர்.
இதுதொடர்பாக கிடைத்த தகவலின்படி, பாஜகவின் கூட்டணிக் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் தினகரன்,தேனி அல்லது சிவகங்கையில் போட்டியிட முயற்சிக்கிறார். கூடுதலாக தஞ்சாவூர் தொகுதியும் தினகரன் கட்சிக்கு கிடைக்கும் எனத் தெரிகிறது. இவற்றில் தனது குக்கர் சின்னத்திலேயே போட்டியிட தினகரன் விரும்புகிறார்.
இவருடன் சசிகலா அணியும் இணைந்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒபிஎஸ் அணி மற்றும் பிற கூட்டணிக் கட்சிகள், பாஜகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிடும் எனத் தெரிகிறது. தேனியை தினகரன் குறி வைத்துள்ளதால் அத்தொகுதி எம்.பி. ஓ.பி.எஸ். ரவீந்திரநாத் ராமநாதபுரத்துக்கு மாறுவார் என்ற கருத்து உள்ளது.
புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம் வேலூரிலும், இந்திய ஜனநாயக கட்சியின் டி.ஆர்.பாரிவேந்தர் பெரம்பலூரிலும் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர். பழைய கூட்டணிக் கட்சியான, தமிழ் மாநில காங்கிரஸ் தனது சைக்கிள் சின்னத்தில் போட்டியிட விரும்புகிறது. இதன் மீதான சென்னை உயர் நீதிமன்ற வழக்கு சமீபத்தில் முடித்து வைக்கப்பட்டது.
அதில் வாசனுக்கு சாதகமாகவே சில அறிவுறுத்தல்கள் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பாமகவுடன் பேச்சுவார்த்தை முடியும் நிலையில் உள்ளதாகவும், தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT