Published : 16 Mar 2024 10:59 AM
Last Updated : 16 Mar 2024 10:59 AM

காங்கிரஸ், மதிமுக தொகுதிகள் எவை? - ஸ்டாலின் 2-வது நாளாக ஆலோசனை

காங்கிரஸ், மதிமுக கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக நேற்றும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக கட்சிகள் தவிர மற்ற இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, கொமதேக, ஐயுஎம்எல் கட்சிகளுக்கு அவர்கள் போட்டியிடுவற்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன.

திமுக இந்த தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ், மதிமுக கட்சிகளுக்கான தொகுதிகள் எவை என்பதில் தான் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தேர்தல் பேச்சுவார்த்தையை தொடங்கும் முன்னரே, ஒவ்வொரு தொகுதியிலும் தற்போதைய நிலை, மக்கள் மனநிலை குறித்து அறிந்து வைத்துள்ளது திமுக. இதுதவிர, திமுகவின் தேர்தல் பணிக்குழு நடத்திய ஆலோசனையில் தொகுதி வாரியாக பங்கேற்ற நிர்வாகிகள் கள நிலவரத்தையும், இந்த தொகுதியில் யார் போட்டியிட்டால் வெல்லலாம் என்பதையும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் சிவகங்கை, விருதுநகர், ஆரணி, கிருஷ்ணகிரி, கரூர், தேனி , திருச்சி தொகுதிகளில் இம்முறை திமுகவே போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுதவிர கள நிலவரத்தையும் அறிந்து வைத்துள்ள திமுக, இந்த தொகுதிகளில் சிலவற்றை காங்கிரஸிடம் இருந்து பெற்றுக் கொண்டு அதற்கு பதில் வேறு தொகுதிகளை தருவதாக பேசியுள்ளது. இதையே காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகையும் சில தொகுதிகள் மாற உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், மதிமுகவும் விருதுநகர் அல்லது திருச்சி தொகுதியை கேட்கிறது. இரண்டும் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் என்பதால், காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிஒதுக்கப்பட்டால் மட்டுமே, மதிமுகவுக்கும் தொகுதி இறுதியாகும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வைத் தொடர்ந்து, துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்டோருடன் காங்கிரஸ், மதிமுக கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை வழங்குவது என்பது குறித்தும், திமுக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, வரும் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சிக்கும், திங்கள்கிழமை மதிமுகவுக்கும் தொகுதிகளை வழங்கி, உடன்பாடு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x