Published : 16 Mar 2024 07:38 AM
Last Updated : 16 Mar 2024 07:38 AM
சென்னை: ஒரு மாநிலத்தில் ஆட்சி நடத்தும் கட்சிகளுக்கு எப்படி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் வந்தது என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டம் எந்தவிதத்திலும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது அல்ல. சிஏஏசட்டம் எல்லோராலும் ஏற்றுக்கொண்டிருக்க கூடிய சட்டம். முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் 35 பக்கம்கொண்ட சிஏஏ சட்டத்தை முழுமையாகப் படிக்க வேண்டும்.
லாட்டரி மார்ட்டினின் உறவினர் ஒருவர் திருமாவளவனின் வலது கரமாக இருக்கிறார். அவருக்காக, பொதுத் தொகுதியை வாங்கி விடலாம் என திருமாவளவன் காத்திருந்தார். அதே லாட்டரி மார்ட்டினின் உறவினர், ஓர் ஆண்டுக்கு முன்,மு.க.ஸ்டாலினுக்கு சமூக வலைதள ஆலோசகராக இருந்தார்.
18 மாநிலங்களில் ஆட்சி நடத்தும் பாஜகவுக்கு எப்படி இவ்வளவுபணம் என கேள்வி கேட்கிறார்கள். அப்படியென்றால், ஒரு மாநிலத்தில் ஆட்சி நடத்தும் திமுகவுக்கு எப்படி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் வந்தது. அதேபோல் ஒரு மாநிலத்தில் ஆட்சி நடத்தும் மம்தா பானர்ஜிக்கு எப்படி 3,000கோடி பணம் எப்படி வந்தது? தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவுக்கு பணம் வந்திருக்கிறது என்றால்,பாஜகவை மக்கள் விரும்புகிறார் கள் என்று அர்த்தம்.
கோவையில் 18-ம் தேதி திட்டமிட்ட படி பிரதமரின் சாலை பேரணி நடப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. உயர் நீதிமன்ற தீர்ப்பை பாஜக மனமார வரவேற்கிறது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மலருவதை போல கன்னியாகுமரியிலும் உறுதியாக தாமரை மலரும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், மார்ட்டினின் உறவினர் மூலம் முக்கிய கட்சிகளான விசிக, திமுக ஆகிய கட்சிகளுக்கு பணம் சென்று அடைந்துள்ளது. இந்தப் பணம் முறைகேடாக ஆதாயம் பெறுவதற்காகத் தரப்பட்டுள்ளது எனவும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT