Published : 16 Mar 2024 06:04 AM
Last Updated : 16 Mar 2024 06:04 AM

யானைக்கவுனி மேம்பாலத்தில் ஒருவழி பாதை திறப்பு: 8 ஆண்டுகளுக்கு பிறகு போக்குவரத்துக்கு அனுமதி

யானைகவுனி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியில் முடிவுற்ற ஒருவழிப் பாதையை இந்து சமய, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை: யானைக்கவுனி மேம்பாலத்தில் பணிகள் நிறைவடைந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருவழிப்பாதை மட்டும் திறக்கப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. யானைக்கவுனி மேம்பாலம் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பேசின் பாலம் ரயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப் பாதையைக் கடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலம் வால்டாக்ஸ் சாலையையும், ராஜா முத்தையா சாலையையும் இணைக்கும் முக்கியமான பாலமாகும். இப்பாலம் மிகவும் பழமையானதாகவும், பழுதடைந்த நிலையிலும் இருந்ததால் பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக கடந்த 2016-ம் ஆண்டு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இப்பாலத்தில் 50 மீட்டர் நீளமுள்ள பகுதி ரயில்வே துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்தப் பகுதியை இடித்துவிட்டு 156.12 மீட்டர் அளவுக்கு ரயில்வே துறையின் மூலம் பாலம் அமைக்கவும், பாலத்தின் இரு புறமும் 364.23 மீட்டர் அளவுக்கு சாய்தள சாலை மாநகராட்சி சார்பில் அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டது.

அதன்படி, வால்டாக்ஸ் சாலையின் பக்கம் 165.24 மீட்டர், ராஜா முத்தையா சாலையின் பக்கம் 198.99 மீட்டர் நீளத்துக்கு சாய்தள சாலை மாநகராட்சி சார்பில் மூலதன நிதியின் கீழ், ரூ.30 கோடியே 78 லட்சத்திலும், ரயில்வே துறை மூலம் ரூ.40 கோடியே 48 லட்சத்திலும் என மொத்தம் ரூ.71 கோடியே 26 லட்சத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் வால்டாக்ஸ் சாலையிலிருந்து, ராஜா முத்தையா சாலையைச் சென்றடையும் வகையில் ஒருவழிப்பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்பி ஆகியோர் பங்கேற்று பாலத்தைத் திறந்து வைத்தனர். 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாலம் போக்குவரத்துக்கு திறந்து வைத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, இணை ஆணையர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், வட்டார துணை ஆணையர்கள் கட்டா ரவி தேஜா, கே.ஜெ.பிரவீன் குமார் மண்டலக் குழுத் தலைவர் பி.ராமுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x