Published : 15 Mar 2024 09:59 PM
Last Updated : 15 Mar 2024 09:59 PM
திருநெல்வேலி: தமிழகத்திலுள்ள 39 மக்களவை தொகுதிகளிலேயே திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடவே அதிகமான திமுக நிர்வாகிகள் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களில் வாய்ப்புகள் அதிகமுள்ளவர்கள் குறித்து அக்கட்சி வட்டாரங்களில் தற்போது விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறதது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் திமுகவினர் மனு அளிக்க கட்சி தலைமை அறிவித்து, நேர்காணலையும் நடத்தி முடித்திருக்கிறது. அதில் தமிழகத்திலேயே அதிகமான திமுக நிர்வாகிகள் விருப்பமனு அளித்திருந்த தொகுதி திருநெல்வேலி. இத்தொகுதியில் போட்டியிட மட்டும் 44 திமுக நிர்வாகிகள் மனு அளித்திருந்தனர்.
அதற்கு அடுத்தபடியாக தென்காசி தொகுதியில் போட்டியிட 42 பேர் மனு அளித்திருந்தனர். மற்ற தொகுதிகளில் 15-க்கும் குறைவாகவே விருப்ப மனுக்கள் பெறப்பட்டிருந்தன. திருநெல்வேலி, தென்காசி தொகுதிகளில் இந்த அளவுக்கு மனுக்கள் அளிக்கப்பட காரணம் குறித்து விசாரித்தபோது, திருநெல்வேலி, தென்காசி தொகுதிகளில் தற்போதுள்ள திமுக எம்.பி.க்கள் மீதான அதிருப்தியால் அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாது என்பதை உறுதி செய்துகொண்டுதான், தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் விருப்ப மனுக்களை அளித்திருப்பதாக சொல்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.
விருப்ப மனுக்களை அளித்தவர்களிடம் கட்சி தலைமை அவசர அவசரமாகவே நேர்காணலை நடத்தியிருந்தது. இதற்கு முந்தைய தேர்தல்களில் நேர்காணல் நடத்தும்போது, தொகுதியில் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை அது தொடர்பான எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை. இதனால் பெருந்தொகை வைத்திருப்பவர்களுக்குத்தான் வாய்ப்பு என்றில்லாமல் மற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற நம்பிக்கை பல திமுக நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கட்சி அறிவிக்கவுள்ள வேட்பாளர் பட்டியலை எதிர்பார்த்து திமுக நிர்வாகிகள் பலரும் காத்திருக்கிறார்கள்.
அந்தவகையில் திருநெல்வேலி தொகுதியில் கிழக்கு மாவட்ட அவை தலைவர் கிரகாம்பெல், இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலர் கணேஷ்குமார் ஆதித்தன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா என்று பலரும் நேர்காணலுக்கு சென்றுவந்துள்ளனர். இவர்களுடன் தற்போதைய சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவுவின் மகன் அலெக்ஸ் அப்பாவு, சட்டப் பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன் மகனும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பிரபாகரனும் காத்திருக்கிறார்கள்.
இவர்களில் கிரகாம்பெல்லுக்கு அதிக வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில் அவருக்கு எதிராக முக்கிய நிர்வாகிகள் சிலர் உள்ளடி வேலைகளில் இறங்கியிருப்பதாகவும் திமுக நிர்வாகிகள் .
திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் மேயர் விஜிலா சத்தியானந்துக்கு கடந்த சில நாட்களுக்குமுன் திடீரென்று வாரிய தலைவர் பதவியை திமுக தலைமை அளித்திருக்கிறது. இதனால் திருநெல்வேலி தொகுதியில் கிறிஸ்தவ வேட்பாளரை திமுக நிறுத்த வாய்ப்பில்லை. பெரும்பாலும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் இந்து நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிடுவார் என்பதால் திருநெல்வேலி தொகுதியில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று திமுக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
வேட்பாளர்கள் தேர்வில் வழக்கமாக உளவுத்துறையின் பரிந்துரைகளுக்கு திமுக தலைமை முக்கியத்துவம் அளித்து வந்த நிலையில், இம்முறை தனியார் நிறுவன கருத்து கணிப்பு அறிக்கையின் அடிப்படையிலேயே வேட்பாளர் தேர்வு இருக்கலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT