Published : 15 Mar 2024 06:26 PM
Last Updated : 15 Mar 2024 06:26 PM
மதுரை: மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனத்தில் நகை அடகு திட்டம் குறித்த மோசடி புகாரை விசாரிக்கவும், மோசடி கண்டுபிடிக்கப்பட்டால் உரிமத்தை ரத்து செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வி.கே.புதூர் ஊத்துமலை பகுதியில் முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனத்தில் சேமிப்பு திட்டத்தில் 10 பவுன் நகை அடகு வைத்தால் கூடுதல் வட்டி வழங்கப்படும், ரூ.10 ஆயிரம் போனஸ் வழங்கப்படும் என ஆசை வார்த்தை கூறி மோசடி செய்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரின் பேரில் வர்ஷா, கலைச்செல்வி, முத்தமிழ்செல்வி, அந்தோணியம்மாள், வெள்ளைதுரை, காளீஸ்வரி, முத்தூட் மேலாளர்கள் இளவரசன், இமானுவேல், ஆடிட்டர் கண்ணன் ஆகியோர் மீது ஊத்துமலை போலீஸார் 1.2.2024-ல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி முத்தமிழ்செல்வி, அந்தோணியம்மாள், வெள்ளத்துரை, காளீஸ்வரி ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தென் மண்டல ஐஜி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதி தண்டபாணி முன்பு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தென் மண்டல ஐஜி அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ‘மதுரை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் முத்தூட் நிதி நிறுவனத்தினர் மற்றும் அவர்களின் ஏஜெண்டுகள் மாதந்தோறும் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பொதுமக்களிடம் ஏராளமான நகைகளை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
முத்தூட் நிதி நிறுவனத்தின் 7 கிளைகளில் மொத்தம் ரூ.3 கோடியே 64 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் 2 வழக்கு, தூத்துக்குடியில் 2 வழக்கு, தென்காசியில் 3 வழக்கு என 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ எனக் கூறப்பட்டிருந்தது.
கூடுதல் அரசு வழக்கறிஞர் பா.நம்பிசெல்வன் வாதிடுகையில், ''தூத்துக்குடி மாவட்டத்தில் பலரது நகைகளை மோசடி செய்த வழக்கில் அடிப்படையில் முத்தூட் நிதி நிறுவனத்துக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் முத்தூட் பின்கார்ப் நிதி நிறுவனத்தினர் நகை மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஓய்வு பெற்ற போலீஸார் இந்த மோசடிக்கு துணையாக இருந்து வருகின்றனர். அப்பாவி பொதுமக்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, மனுதாரர்களின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்றார்.
இதையடுத்து நீதிபதி, ''அப்பாவி பொதுமக்களின் நகைகளை பெற்று முத்தூட் நிறுவனம் மோசடி செய்துள்ளது. இதனால் மனுதாரர்களின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட உயர் நீதிமன்ற மதுரை கிளையின் அதிகார வரம்புக்கு கீழ் வரும் மாவட்டங்களில் முத்தூட் நிதி நிறுவன மோசடி குறித்து மாவட்ட ஆட்சியரும், போலீஸாரும் இணைந்து விசாரணை நடத்த வேண்டும்.
முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். முத்தூட் நிதி நிறுவன மோசடியால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? முத்தூட் நிதி நிறுவனத்தினருடன் கூட்டு சேர்ந்து மோசடி செய்தவர்கள் யார் யார்? இந்த வழக்குகளில் எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை குறித்து போலீஸார் ஜூன் மாதம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT