Published : 15 Mar 2024 03:35 PM
Last Updated : 15 Mar 2024 03:35 PM

“தேர்தல் புறக்கணிப்பு இல்லை; பாஜகவுடன் கூட்டணிப் பேச்சு நீடிப்பு” - ஓபிஎஸ் விளக்கம்

சென்னை: “மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை” என்று தேர்தலை புறக்கணிக்க போவதாக எழுந்த செய்தி குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஓபிஎஸ் விடுத்துள்ள அறிக்கையில், "வருகின்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஊடகங்களில் வருகின்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இதுபோன்ற வதந்திகளை, விஷமப் பிரச்சாரங்களை, தவறான தகவல்களை தொண்டர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

மக்களவைத் தேர்தல் குறித்து எடுக்கப்படும் முடிவு என்னால் மட்டுமே அறிவிக்கப்படும் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற மக்களவைத் தேர்தலில் ‘இரட்டை இலை’ சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்பது விருப்பம். இதனை, பத்திரிகையாளர் சந்திப்பின்போது நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன்.

இதனைத் தொடர்ந்து ‘இரட்டை சிலை’ சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்த முயற்சிக்கு விரைவில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இந்தியாவில் தொடர்ந்து நிலையான ஆட்சியை பிரதமர் மோடியால் மட்டுமே தர முடியும் என்பதன் அடிப்படையில், பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவினை தெரிவித்துள்ளோம். இதன் அடிப்படையில், கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதற்கான முடிவு எட்டப்பட்டவுடன் அதுபற்றிய விவரங்கள் அனைத்தையும் நானே தெரிவிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இதற்கிடையே பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x