Published : 15 Mar 2024 09:15 AM
Last Updated : 15 Mar 2024 09:15 AM
புதுச்சேரியில் இதுவரை 14 மக்களவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 10 முறை காங்கிரஸ் வென்றுள்ளது. தலா ஒரு முறை என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, திமுக, பாமக வென்றுள்ளன.
இண்டியா கூட்டணி: கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், திமுக 6 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது. இதனால் இண்டியா கூட்டணியில் புதுவை மக்களவைத் தொகுதியை பெற திமுக இறுதி வரை முயற்சித்தது.
ஆனாலும், தற்போதைய புதுவை எம்.பி காங்கிரஸை சேர்ந்தவர் என்பதால் புதுச்சேரி தொகுதியை காங்கிரஸூக்கு திமுக தலைமை ஒதுக்கியுள்ளது. தற்போது எம்.பி.யாக உள்ள வைத்திலிங்கமே மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட கூடுதல் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் போட்டியிட முயற்சிப்பதாக கட்சி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணியில் இத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுவையில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட மறுப்பு தெரிவித்து வருவதால் பாஜக வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடிக்கிறது. தகுதியான வேட்பாளரை தேர்வு செய்வதில் கடைசி கட்ட பேச்சு நடந்து வருகிறது.
இதுகுறித்து பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, "புதுவை தொகுதிக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் தமிழிசை ஆகியோர் பெயர்களை பரிசீலித்தனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இன்னும் 4 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தற்போது தான் மாநிலங்களவையில் பாஜக, கூட்டணி கட்சியுடன் இணைந்து 118 எம்.பி.க்கள் பலத்தை பெற்று பெரும்பான்மையை நெருங்கியுள்ளது. இந்த பெரும்பான்மையை இழக்க பாஜக தயாராக இல்லை.
அதேநேரத்தில் வெளி மாநிலத்தவர் புதுச்சேரியில் போட்டியிடவும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனால் ஆளுநர் தமிழிசையை வேட்பாளராக அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாஜகவில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ள பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ, நியமன எம்எல்ஏ, காரைக்காலைச் சேர்ந்த மதுபான ஆலை தொழிலதிபர் என பலரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன" என்கின்றனர்.
கடந்த 91, 96 மற்றும் 2009-ல் காங்கிரஸுடன் பாஜக நேரடியாக மோதியிருந்தாலும் இதுவரை அக்கட்சி மக்களவைத் தேர்தலில் வென்றதில்லை. ஆனால், 2021 சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற வெற்றியை முன்மாதிரியாக கொண்டு, இந்த முறை மக்களவைத் தேர்தலில் வென்றுவிட பாஜக தீவிரமாக முயற்சிக்கிறது.
பாரம்பரியமான வாக்காளர்களைக் கொண்ட காங்கிரஸ், புதிய வளர்ச்சியைக் கொண்டுள்ள பாஜக இடையே இந்த மோதல் பலமாக இருக்கும். இந்தச் சூழலுக்கு நடுவில் அதிமுகவும் தனது இருப்பை தக்க வைக்கும் விதத்தில் தனித்துப் போட்டியிட பணிகளைத் தொடங்கி, ஆர்வத்துடன் களப்பணியாற்றி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT