Published : 15 Mar 2024 05:01 AM
Last Updated : 15 Mar 2024 05:01 AM

கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி இன்று வருகை: பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்

கன்னியாகுமரியில் இன்று பாஜக பொதுக்கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில்: மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி இன்று காலை கன்னியாகுமரி வருகிறார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். மக்களவை தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் பல்லடம், நெல்லை, சென்னையில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், பிரதமர் இன்று கன்னியாகுமரி வருகிறார்.

திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு காலை 11 மணி அளவில் வரும் பிரதமர், அங்கிருந்து காரில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.

பொதுக்கூட்டம் முடிந்த பிறகு,பகல் 12.15 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மீண்டும் திருவனந்தபுரம் செல்கிறார்.

பிரதமர் வருகையால் கன்னியாகுமரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் வந்திறங்கும் அரசு விருந்தினர் மாளிகை, பொதுக்கூட்டம் நடைபெறும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானம் மற்றும் இங்குள்ள சாலைகள் அனைத்தும் போலீஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி கடல் பகுதியில் மீன் பிடிக்கதடை விதிக்கப்பட்டுள்ளது. கடல்பகுதியில் மெரைன் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் வருகையால் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x