Published : 15 Mar 2024 05:50 AM
Last Updated : 15 Mar 2024 05:50 AM
சென்னை: கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ‘ரோடமைன் பி’ வேதிப்பொருட்கள் கலந்து தயாரிக்கப் பட்டதால் அந்த வகை உணவுக்கு தடை விதிக்கப்பட்டது.
‘ரோடமைன் பி’ வேதிப்பொருள்: தமிழகத்தில் ஏற்கெனவே பஞ்சு மிட்டாயில், ‘ரோடமைன் பி’ இருந்ததால், அதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. தற்போது கோபி மஞ்சூரியன் வகைகள், சிக்கன் வகைகள், பிரியாணி, சிவப்பு மிளகாய் உள்ளிட்டவற்றிலும், ‘ரோடமைன் பி’ கலப்பது தமிழக உணவு பாதுகாப்பு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், கர்நாடகாவை தொடர்ந்து, தமிழகத்திலும், ‘கோபிமஞ்சூரியன்’ போன்ற உணவு களுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு தடை உள்ளது. ஆனால், கர்நாடகாவில் அவற்றுக்கு தடை இல்லை. இங்கு பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்பட்டது. கர்நாடகாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்துள்ளார்கள் என்பதற்காக, தமிழகத்தில் தடை செய்ய முடியாது.
கோபி மஞ்சூரியனுக்கு தடைவிதிப்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையின் பரிந்துரைப் படியே நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் போதைப் பொருட்கள் குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் எங்கேயும் கஞ்சா பயிரிடப்பட வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT