Published : 02 Feb 2018 09:17 AM
Last Updated : 02 Feb 2018 09:17 AM

மன்னார் மாவட்டத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த தலைமன்னார்-ராமேசுவரம் இடையே மீண்டும் கப்பல் இயக்க தயார்: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு

மன்னார் மாவட்டத்தின் பொருளாதாரத்தையும், சுற்றுலாவையும் மேம்படுத்துவதற்காக தலைமன்னார்- ராமேசுவரம் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்கத் தயார் என அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே கப்பல் போக்குவரத்து 1914-ல் தொடங்கப்பட்டது. கப்பல் போக்குவரத்து தொடங்கி 50 ஆண்டுகளில் 1964 டிச.22-ல் துறைமுக நகரமான தனுஷ்கோடி புயலால் அழிந்தது. பின்னர் 1965 முதல் ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

`ராமானுஜம்' என்ற பெயர் கொண்ட இந்த கப்பலில் அதிகபட்சம் 400 பேர் பயணம் செய்யலாம். இதில் முதல் வகுப்பு கட்டணம் ரூ.123, சாதாரண கட்டணம் ரூ.60. ராமேசுவரத்தில் இருந்து ஒருநாள்விட்டு ஒரு நாள் என வாரத்துக்கு 3 நாட்கள் `ஹவுஸ்புல்'லாகவே தலைமன்னாருக்கு கப்பல் சென்றுவந்தது.

ராமேசுவரத்தில் இருந்து பல்வேறு வகையான பண்டங்களும், சரக்குகளும் தலைமன்னார் வரை கப்பலில் கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து ரயிலில் கொழும்புக்கு கொண்டு சென்றனர். கொழும்பில் இருந்து மின்சாதன பொருட்களை வாங்கி வந்தனர். இதனால், தமிழக தென் மாவட்டங்களின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி அடைந்து வந்தது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம், தலைமன்னார் முதல் மதவாச்சி வரையிலான ரயில் பாதை முற்றிலும் சேதம் அடைந்தது மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக கப்பல் போக்குவரத்து 1983-ல் நிறுத்தப்பட்டது. இதனால் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் வணிகரீதியாக பின்னடைவைச் சந்தித்ததோடு வறட்சியான மாவட்டங்கள் எனவும் பெயர் எடுத்தன.

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் தூத்துக்குடி-கொழும்பு இடையே ஸ்கார்டியா பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல் போக்குவரத்து 2011-ல் தொடங்கப்பட்டது. இது இரு நாட்டு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் தமிழக அரசின் எதிர்ப்பைத் தொடர்ந்து கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், பிப். 10-ம் தேதி இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக மன்னார் மாவட்டத்தில் கிராமம், நகரசபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மன்னார் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் தலைவரும் இலங்கை பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கே பேசியதாவது:

இலங்கையை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கம் எவ்வாறு உள்ளதோ அதேபோல் மன்னார் மாவட்டத்தையும் முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கம் எங்களுக்கு உள்ளது.

மன்னார் மாவட்டத்தின் பொருளாதாரத்தையும், சுற்றுலாவையும் மேம்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக தலைமன்னாரில் இருந்து ராமேசுவரத்துக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கும் தயாராக உள்ளோம் என் றார்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் கொழும்பில் இருந்து தூத்துக்குடிக்கு சரக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x