Published : 15 Mar 2024 05:55 AM
Last Updated : 15 Mar 2024 05:55 AM

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி: நந்தம்பாக்கம், பட்ரோட்டில் மே முதல் போக்குவரத்து மாற்றம்

கோப்புப்படம்

சென்னை: நந்தம்பாக்கம் மெட்ராஸ் போர் கல்லறை, பட் ரோடு மற்றும் பால்வெல்ஸ் ரோடு ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் பணி காரணமாக, தற்காலிக போக்குவரத்து மாற்றம் வரும் மே முதல் வாரத்தில் நடைமுறைக்கு வருகிறது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

5-வது வழித்தடம் மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை(44.6 கி.மீ.) தொகுப்பில் சிஎம்பிடி-யில் இருந்து தொடங்கி காளியம்மன் கோயில் தெரு, மவுண்ட்-பூந்தமல்லி சாலை, பட் ரோடு, உள்வட்டச் சாலை வழியாக மேடவாக்கம் பிரதான சாலையுடன் ஒன்றிணைந்து சோழிங்கநல்லூர் வரை தொடர்கிறது.

நந்தம்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் போர் கல்லறை, பட் ரோடு மற்றும் பால்வெல்ஸ் ரோடு போன்ற சில இடங்களில் தற்போதுள்ள சாலையின் அகலம் குறுகலாக உள்ளதால், இந்த இடங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் போரூரில் இருந்து தற்காலிகமாக ஒருவழிப் போக்குவரத்தை திசை திருப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான காலி நிலத்தில் போர் கல்லறை, டிஃபென்ஸ் காலனி1-வது அவென்யூ, கண்டோன்மென்ட் சாலைகள், தனகோட்டி ராஜா தெரு, சிட்கோ தொழிற்பேட்டை தெற்கு சாலை, ஒலிம்பியாசந்திப்பு வழியாக இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்படஉள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான நிலத்தின் வழியாக பரிந்துரைக்கப்பட்ட தற்காலிக சாலை போக்குவரத்து மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது.

இதனை ஏற்கெனவே தமிழக சிறுதொழில் வளர்ச்சிக் கழக நிறுவனம் மற்றும் கன்டோன்மென்ட் போன்ற பிற துறைகள் ஏற்றுக்கொண்டுள்ளன. பால்வெல்ஸ் சாலை மற்றும் பட் ரோட்டில்மெட்ரோ பணிகள் முடியும் வரைஇந்த தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சாலை போக்குவரத்து மாற்றத்துக்கான மேற்கண்ட நிலம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது புதர்களை அகற்றும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், சாலை மேம்பாட்டு பணிகள் 2 மாதங்களில் முடிக்கப்படும்.

பரிந்துரைக்கப்பட்ட தற்காலிக சாலை போக்குவரத்து மாற்றம் மே முதல் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வரும். இத்தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x