Published : 15 Mar 2024 06:22 AM
Last Updated : 15 Mar 2024 06:22 AM

வெள்ள பாதிப்பை பார்க்க வராமல் ஓட்டு கேட்க மட்டும் வருவது நியாயமா? - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின்கீழ் 11 துறைகளை உள்ளடக்கி ரூ.4,181 கோடி மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளில் முதல்கட்டமாக 87 பணிகளை சென்னை தங்கசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மீதமுள்ள திட்டப் பணிகள் 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளன. மேலும், வடசென்னை வளர்ச்சித் திட்டத்துக்கான இலச்சினையையும் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சென்னை மீண்டும் புதுப்பொலிவு அடைந்து கொண்டு வருகிறது. இதற்கான சிறப்புத் திட்டம்தான் வடசென்னை வளர்ச்சித் திட்டம். கடந்த பட்ஜெட்டில் இதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கினோம்.

ஆனால், வடசென்னையின் மக்கள்தொகை, இடப்பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல், இந்தப் பகுதி மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகள், இதையெல்லாம் மனதில் வைத்து, இத்தொகையை இன்று 4 மடங்கு உயர்த்தி, ரூ.4,181 கோடியில் 11 அரசுத் துறைகளுடன் இணைந்து, வட சென்னை வளர்ச்சிக்கு இந்த மெகா திட்டம் செயல்பட போகிறது.

ரூ.640 கோடியில் கொடுங்கையூர் உயிரி சுரங்கத் திட்டம், ரூ.238 கோடியில் இரு பெரிய பாலங்கள், ரூ.80 கோடியில் தணிகாசலம் கால்வாய் புனரமைப்பு, ரூ.823 கோடியில் பாரிமுனை பேருந்து முனையம் மறுகட்டுமானம், 15 இடங்களில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 7,060 சேதமடைந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 9,798 புதிய குடியிருப்புகள் ரூ.567.68 கோடியில் புதிதாக கட்ட உள்ளோம்.

கடந்த 10 ஆண்டுக்கால பாஜக ஆட்சியும், சென்னைக்கு மட்டுமல்ல; தமிழகத்துக்கும் எதுவும் செய்யவில்லை. பிரதமர் நாளை (இன்று) கன்னியாகுமரி வருகிறார். சிறப்பு திட்டங்களை உருவாக்கித் தர அல்ல; ஓட்டு கேட்டு வரப்போகிறார்.

சென்னை வெள்ளத்தில் மிதந்தபோது மக்களுக்கு ஆறுதல் கூற வராத பிரதமர், தூத்துக்குடியும், கன்னியாகுமரியும் வெள்ளத்தில் மிதந்தபோது மக்களை பார்க்க வராத பிரதமர் ஓட்டு கேட்டு வருவது மடடும் நியாயமாக இருக்கிறதா?

குஜராத் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, அன்றே ஹெலிகாப்டரில் சென்று பார்த்து, நிவாரண நிதி கொடுத்தாரே. குஜராத்துக்கு அன்றே நிதி தருவதும், தமிழகத்துக்கு 3 மாதம் சென்ற பிறகும் நிதி தர மனமில்லாமல் போவதும்ஏன்? இதை கேட்டால் நம்மை பிரிவினைவாதி என்று அடையாளப்படுத்துகின்றனர்.

சென்னை மெட்ரோரயில் 2-ம் கட்ட பணிக்கு நிதி கேட்டேன். நமக்கு அடுத்து கேட்ட மாநிலங்களுக்கு வழங்குகின்றனர். நமக்கு ஒன்றும் தரவில்லை. பிரிவினை எண்ணம் எங்களுக்கு இல்லை.

தேசபக்தி பற்றி எங்களுக்கு யாரும் போதிக்க வேண்டாம்.தமிழகத்தின் வளர்ச்சியின் தொடர்ச்சியாக இந்தியாவையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்புநமக்கு வந்துள்ளது. அதற்கு துணைநிற்க உங்களை அழைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியன், பி. கே. சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x