Published : 11 Aug 2014 10:35 AM
Last Updated : 11 Aug 2014 10:35 AM
சென்னையில் விடுமுறை நாட்களில், பறக்கும் ரயிலில் பள்ளி மாணவர்கள் புரியும் சாகசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஏதாவது விபரீதம் நடக்கும் முன்பாக இந்த அட்டகாசத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
சென்னை கடற்கரை - வேளச் சேரி மார்க்கத்தில் அதிகாலையி லிருந்து இரவு பத்தரை மணி வரை பறக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் போதிய இருக்கைகள் இருந்தாலும் ஆணும் பெண்ணும் ஜோடி ஜோடியாய் அரட்டை அடித்துக் கொண்டு வழியிலேயே நின்றுவிடுகிறார்கள். இன்னும் சிலபேருக்கு அலைபேசியில் அரட்டை வேறு. இதனால், பயணிகள் ரயிலில் ஏறவும் இறங்கவும் ரொம்பவே சிரமப்பட வேண்டியுள்ளது.
விடுமுறை நாட்களில் பள்ளிச் சிறுவர்கள் கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை ஸ்டேஷன்களில் கும்பலாக வந்து ரயிலில் ஏறுகிறார்கள். இவர்கள் உள்ளே வந்து உட்காருவதே இல்லை. மாறாக, வழியில் நின்று கொண்டு கம்பியைப் பிடித்து வெளியில் தொங்கி சாகசம் செய்து கொண்டே வருகிறார்கள்.
ஸ்டேஷனில் ரயில் நிற்கும் முன்பாகவே கீழே குதித்துவிட்டு மறுபடியும் ரயில் புறப்பட்டதும் கொஞ்ச தூரம் நடைமேடையில் ஓடி வந்து ரயிலில் ஏறுகிறார்கள். ரயிலில் ஏறியதும் ஒரு காலை மட்டும் பிளாட்பாரத்தில் வைத்துத் தேய்த்துக் கொண்டே நீண்ட தூரம் சர்க்கஸ் செய்கிறார்கள். சிலநேரங்களில் எவ்வளவு தூரம் ரயிலை தொட்டு ஓடிவருகிறோம் என்று பந்தயம் வேறு கட்டுகிறார்கள்.
இவர்களை தடுத்து நிறுத்த முடியாதா? என்று ரயில்வே போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது அவர்கள் சொன்ன பதில் விநோதமாக இருந்தது. “இந்தப் பசங்க பண்ற அட்டூழியத்தை நாங்களும் பார்த்துக்கொண்டு தான் வர்றோம். சில நேரங்களில் நாங்களே களத்துல இறங்கி லத்தியால போடுவோம். அப்ப, மற்ற பயணிகள் எங்க மேல கோவப்படுறாங்க. ‘சின்னப் பசங்களை இப்படி அடிக்கலாமா?’ன்னு கேக்குறாங்க.
இந்தப் பசங்கள பிடிச்சுட்டுப் போய் உடனடியா வழக்கும் போடமுடியாது. பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறார்கள்னு அரசு மருத்துவர்கிட்ட சான்றிதழ் வாங்கித்தான் வழக்குப் போடணும். பெரும்பாலும் விடுமுறை நாட்களில் அரசு மருத்துவர்களை பிடிக்கவும் முடியாது. அவரிடம் சான்றிதழ் வாங்க ரயில்வே போலீஸ் எஸ்.ஐ. அல்லது இன்ஸ்பெக்டர் தான் போகணும். அவங்களிடம் இந்த விஷயத்தைச் சொன்னோம்னா, ‘எதுக்குய்யா இந்த வேண்டாத வேலை உனக்கு? நீதானே சிறுவர்களை பிடிச்ச... நீயே போய் சான்றிதழ் வாங்கிட்டு வா’ன்னு எங்க தலையில கட்டிருவாங்க.
அப்படியே மருத்துவரிடம் சான்றிதழ் வாங்கி மாஜிஸ்திரேட் வீட்டுக்கு கூட்டிட்டுப் போனாலும், ‘உங்களுக்கு வேற வேலையே இல்லையா?’ன்னு அங்குள்ளவர்கள் கோவப் படுவாங்க. அதனால, அடுத்த பணி நாள் வரை அந்தப் பசங்கள நாங்களே எங்க கஸ்டடியில பத்திரமா பாதுகாத்து வைத்திருந்து கோர்ட்டுல ஒப்படைக்கணும். இதுல எவ்வளவு நடைமுறை சிக்கல்கள் இருக்குன்னு எங்களுக்குத்தான் தெரியும். அதனாலதான் இந்தப் பசங்கள கைது பண்றதுக்கு நாங்க அக்கறை காட்டுவதில்லை. அவ்வப்போது லத்தியைக் காட்டி மிரட்டுவோம். எங்களுக்குப் பயப்படுற மாதிரி பாவ்லா காட்டிட்டு, ரயில் கிளம்பியதும் எங்களையே கிண்டல் பண்ணிட்டு மறுபடியும் பிளாட்பார்ம்ல ஓட ஆரம்பித்துவிடுவார்கள்.
அதேசமயம் இந்தப் பசங்க யாரும் டிக்கெட் எடுக்காம ரயிலில் ஏறமாட்டாங்க. அதுக்கும் ஒரு காரணம் இருக்கு. தப்பித் தவறி இவங்க ரயிலில் விழுந்து அடிபட்டுட்டா, ரயில்வே துறை மீது ஏதாவது பொய்யான காரணத்தைச் சொல்லி வழக்குப் போட்டு இன்ஷூரன்ஸ் க்ளைம் பண்றாங்க. அதுக்கு ரயிலில் பயணம் செய்ததற்கான அத்தாட்சி இருக்கணும். அதுக்காகத்தான் இவங்க டிக்கெட் எடுக்குறாங்க” இவ்வாறு ரயில்வே போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT