Published : 21 Feb 2018 08:01 AM
Last Updated : 21 Feb 2018 08:01 AM

காட்சிப் பொருளாக மாறிவரும் கிராம சேவை மையங்கள்: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.100 கோடி விரயமாகும் அவலம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் ரூ.100 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கிராம சேவை மையங்கள் தொடர்ந்து பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளன. இந்த மையங்களை விரைவாகப் பயன்பாட்டுக் குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராம மக்கள் மேம்பாட்டுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டு பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதை எளிதாக்க மின்ஆளுமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தில் வருவாய் துறையினரின் சான்றிதழ்கள், சமூக பாதுகாப்புத் திட்டங் களுக்கு விண்ணப்பிப்பது, போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளைப் படி எடுப்பது, கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிப்பது போன்ற சேவைகள் எளிதில் கிடைத்து வருகின்றன.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பொதுச் சேவை மையங்கள் முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் மட்டும் செயல்பட்டு வந்தன. பின்னர் பொதுச் சேவை மையங்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கும், ஊராட்சி ஒன் றிய அலுவலகங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டன.

கிராம மக்கள் நகரத்துக்கு வந்து சிட்டா, பட்டா போன்றவை பெறுவதற்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் தவம் இருந்த நிலை தற்போது மாறியுள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான நிலச் சான்றுகளைப் பொதுச் சேவை மையங்களிலேயே பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. சான்றிதழ்கள் பெறுவதை எளிமையாக்கிய இந்தத் திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றன.

இந்நிலையில் இத்திட்டங்களை மேலும் எளிமையாக்க, கிராமங்கள்தோறும் கிராமச் சேவை மையங்களை அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்காக தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியில் கிராம சேவை மையங்களுக்கான கட்டிடங்கள் உரிய அனுமதி பெறப்பட்டு கட்டப்பட்டன.

625 கிராமங்களில் மையம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 625 கிராமங்களில் தலா ரூ.13.12 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரையிலான மதிப்பீட்டில் இந்தச் சேவை மையங்களுக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மகளிர் சுய உதவிக் குழுக் களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்கள் மூலம் இந்த கிராம சேவை மையங்களைச் செயல் படுத்த அரசு திட்டமிட்டது. ஆனால், கட்டிடங்கள் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் செயல்பாட்டுக்கு இவை வரவில்லை.

இதனால் காஞ்சிபுரம் மாவட் டம் முழுவதும் 625 இடங்களில் ரூ.100 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடங்கள் பயன்பாடு இல்லாமல் பூட்டப்பட்டு கிடக்கின்றன. சில இடங்களில் இந்த மையக் கட்டிடங்கள் தற்காலிக ஊராட்சி மன்ற அலுவலகங்களாகவும், சில இடங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினர் ஓய்வு எடுக்கும் இடங்களாகவும் மாறியுள்ளன.

இந்த மையங்கள் செயல்பாட்டுக்கு வராததால் மக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளது. மேலும் அரசின் சேவைகளைப் பொதுமக்கள் விரைவாகப் பெறுவதிலும் தடைகள் ஏற்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி கிராம சேவை மையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சரஸ்வதி கணேசனிடம் கேட்டபோது, ``கட்டி முடிக்கப்பட்ட கிராம சேவை மையங்களில் பாதி அளவு மட்டுமே எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் மின் இணைப்பு பெறாமல் இருப்பது போன்ற சிறு காரணங்களால் மையங்கள் ஒப்படைக்கப்படாமல் உள்ளன.

குக்கிராமங்களில் கட்டப்பட்ட கிராம சேவை மையங்களில் இணையதள வசதி கிடைப் பதிலும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிர்வாகத்துடன் பேச உள்ளோம்.

முதல் கட்டமாக 64 கிராம சேவை மையங்களைச் செயல்பாட்டுக்கு கொண்டு வர, தேசிய தகவல் மையத்தில் (நிக்) யுனிக் ஐ.டி. (தனிப்பட்ட ஐ.டி.) கேட்டு விண்ணப்பித்துள்ளோம். எங்களுக்கு யுனிக் ஐ.டி கிடைத்தவுடன் அவற்றை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x