Published : 14 Mar 2024 08:58 PM
Last Updated : 14 Mar 2024 08:58 PM

ஸ்டாலின் தொடர்ந்த அவதூறு வழக்கு முதல் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ புதிய சாதனை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 14, 2024

ஜாபர் சாதிக்கின் சென்னை குடோனில் சோதனை: ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரித்து வரும் நிலையில், சென்னை மற்றும் திருச்சியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோன்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, சென்னை பெருங்குடியில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள குடோனில் ஐந்துக்கும் மேற்பட்ட மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்தக் குடோனில் இருந்து பல ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

100 நாள் வேலை ஊதிய நிலுவை: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ஜனவரி 5-ம் தேதி வரை திரட்டப்பட்ட மொத்த ஊதிய பொறுப்புத் தொகையான ரூ.1,678.83 கோடியை தொழிலாளர்களுக்கு உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

இபிஎஸ், அண்ணாமலைக்கு எதிராக ஸ்டாலின் அவதூறு வழக்கு: போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘போதைப்பொருட்கள் கடத்தல் விவகாரத்தில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டது தொடர்பாக கடந்த மார்ச் 8-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வரான என்னை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். இதே விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டிருந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.

தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், பேசிய எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாய தமிழ்ப் பாடம் தேர்வில் விலக்கு: சீமான், ராமதாஸ் எதிர்ப்பு: "தமிழகத்தில் பிறமொழியில் பயிலும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்புத் தேர்வில் கட்டாயத் தமிழ் பாடம் தேர்வு எழுதுவதிலிருந்து நடப்பாண்டு திமுக அரசு விலக்கு அளித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதனிடையே, “தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழகத்தில் தமிழ் கட்டாயப் பாடச் சட்டம் கொண்டு வருவதற்கு விடுதலைக்குப் பிறகு 60 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அந்தச் சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகியும் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பது உண்மையாகவே தமிழர்கள் தலைகுனிய வேண்டிய ஒன்றாகும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மார்ச் 18-ல் கோவை வருகை: பிரதமர் நரேந்திர மோடி வரும் 18-ம் தேதி கோவைக்கு வருகிறார். கோவையில் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு ‘ரோடு ஷோ’ நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.

இதனிடையே “தமிழக அரசு கேட்ட மழை, வெள்ள நிவாரணத் தொகை ரூ.37,000 கோடியில் ஒரு சல்லிக் காசு கூட தராத நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கன்னியாகுமரியில் வெள்ளிக்கிழமை கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் - குடியரசுத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வியாழக்கிழமை வழங்கியது.

தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து இக்குழு ஆலோசனைகளை பெற்றது. 191 நாட்கள் இதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கியது.

சிஏஏ வாபஸ் பேச்சுக்கே இடமில்லை: அமித் ஷா திட்டவட்டம்: “நம் தேசத்தில் இந்தியக் குடியுரிமையை உறுதி செய்வது இறையாண்மை சார்ந்த உரிமை. அதில் எந்த சமரசமும் செய்யப்படாது. சிஏஏ-வை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை. சிஏஏ யாருடைய குடியுரிமையும் பறிக்காது” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்தச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்து நாங்கள் வாக்கு வங்கி அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. எதிர்க்கட்சியினருக்கு வேறு வேலை ஏதும் இல்லை. அவர்கள் சொல்வது ஒன்று செய்வது ஒன்று. ஆனால் பிரதமர் மோடியின், பாஜகவின் வரலாறு வேறு. பாஜக சொல்வதும், பிரதமர் பேசுவதும் கல்வெட்டில் எழுதிய வார்த்தைகள் போன்றது. மோடியின் ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படும். சிஏஏவையும் நாங்கள் தேர்தலை சந்திக்கும் முன் நிறைவேற்றியுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து தேர்வு’: தேர்தல் ஆணையர் அருண் கோயலின் திடீர் ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய தேர்தல் ஆணையர்களாக இருவரை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழுக் கூட்டம் டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த தேர்வுக் குழுவில், சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழு புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகியோரை தேர்வு செய்துள்ளது. இந்தத் தகவலை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வெளியிட்டார்.

மலையாள சினிமா வசூலில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ புதிய சாதனை!: மலையாள திரையுலகில் அதிகபட்ச வசூல் சாதனை படைத்த படம் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. 21 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.176 கோடி வசூலை அந்தப் படம் ஈட்டியுள்ளது. முன்னதாக, ‘2018’ திரைப்படம் ரூ.175 கோடி வசூலுடன் முதலிடம் வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சி கோப்பை: மும்பை 42-வது முறையாக சாம்பியன்!: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 42-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

“குஷ்பு உள் அர்த்தத்துடன் சொல்லியிருக்க வாய்ப்பில்லை”: மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக குஷ்பு உள் அர்த்தத்துடன் சொல்ல வாய்ப்பில்லை என்றும் தவறாக சொல்லியிருக்க மாட்டார் என்றும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் சுதா மூர்த்தி: பிரபல நன்கொடையாளரும், எழுத்தாளரும், இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தியை, மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சமீபத்தில் நியமித்தார். இதையடுத்து, சுதா மூர்த்தி நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

“இது வரலாற்று சிறப்புமிக்க நாள்” - அமித் ஷா: “ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த உயர்மட்டக் குழுவின் அறிக்கை குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட இந்த நாள், நமது நாட்டின் ஜனநாயக அமைப்புக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அகதிகள் முகாமில் பிறந்தோருக்கு குடியுரிமை: பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு: அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு, பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘புதுச்சேரியில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தேவை’: மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினை நிரந்தரமாக புதுச்சேரியில் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆளுநர் தமிழிசையிடம் அதிமுகவினர் மனு அளித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x