Published : 14 Mar 2024 06:22 PM
Last Updated : 14 Mar 2024 06:22 PM

லஞ்சம் கேட்டதற்கு எதிராக கும்பகோணம் - பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

கும்பகோணம்: பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பு, அலுவலர்கள், இடைத்தரகர் லஞ்சமாக பணம் கேட்டதைக் கண்டித்துக் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டை, மகிமாலையைச் சேர்ந்தவர் நடேசன் (70). விவசாயியான இவருக்கு உலகநாதன் மகன் உள்ளார். உலகநாதனுக்கு திருமணமாகி நர்மதா மனைவி உள்ளார். இந்த நிலையில், நடேசன், தனது மகன் உலகநாதனுக்குத் அண்மையில் தனது நிலத்தை வழங்கினார். பின்னர், உலகநாதன், அந்த நிலத்தை பதிவு செய்ய மெய்த்தன்மை சான்றிதழ் தேவைப்பட்டதால், தனது மனைவி நர்மதாவுடன், கடந்த பிப்.7-ம் தேதி, பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று, இந்த சான்றிதழ் தொடர்பாக அங்குள்ள அலுவலரிடம் கேட்டார்.

அதற்கு, அங்கிருந்த அலுவலர், சான்றிதழ் பெற வேண்டும் என்றால், இடைத்தரகர் மூலம் ரூ. 8 ஆயிரம் லஞ்சமாகப் பணம் வழங்கினால் கிடைக்கும். மேலும், அந்தப் பணத்தை இங்குள்ள பலரிடம் பிரித்து வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பிப்.20-ம் தேதி இடைத்தரகருக்கு ஜி பே மூலம் ரூ.500 அனுப்பி வைத்தார். இதனிடையே, உலகநாதனால், மீதமுள்ள ரூ.7500 பணம் திரட்ட முடியாததால், அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, உலகநாதன், இவரது மனைவி நர்மதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், ஒன்றிய நிர்வாகிகள் பி.சின்னராசு, பொன்.சேகர், எஸ்.திருநாவுக்கரசு ஆகியோர், லஞ்சப் பணம் கேட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு, வட்டாட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x