Published : 14 Mar 2024 05:10 PM
Last Updated : 14 Mar 2024 05:10 PM
புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை உள்ள உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை பாஜகவினர் நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சொலை நகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கருணாஸ், விவேகானந்தன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முழு விசாரணையும் மேற்கொள்ள சீனியர் எஸ்பி கலைவாணன் தலைமையில சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தேசிய பட்டியலின ஆணையமும் தாமாக முன்வந்து நேரில் விசாரணை மேற்கொண்டது. சிறுமி கொலை வழக்கு சம்மந்தமான சாட்சி, ஆவணங்கள் அனைத்தும் புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் செல்வ கணபதி எம்பி, மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சாய் ஜெ சரவணன் குமார், எம்.எல்.ஏ-க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், அசோக் பாபு, முன்னாள் மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு இன்று பிற்பகல் வந்தனர்.
பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்தனர். கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவியை சிறுமியின் தந்தையிடம் வழங்கினர். அப்போது ‘‘எங்கள் குழந்தைக்கு நடந்த சம்பவம் போன்று இனி வேறு யாருக்கும் நடக்கக் கூடாது’’ என்று சிறுமியின் தந்தை மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தினர்.
அதற்கு மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்பி உள்ளிட்டோர், ‘‘எங்களது குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்வாகத்தான் இதனை நாங்கள் பார்க்கின்றோம். இந்நிகழ்வு மிகுந்த வருத்தத்தை தருகிறது. விரைவில் கொலையாளிகளுக்கு தண்டனை பெற்று தந்து, இனி புதுச்சேரியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதில் நாங்கள் தெள்ளத் தெளிவாக அதற்கான நடவடிக்கை எடுக்கின்றோம். நிச்சயம் செய்து காட்டுவோம். பாஜக சார்பிலும், பிரதமர் மோடியின் சார்பிலும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கின்றோம்’’என்றனர்.
பின்னர் மாநிலத் தலைவர் செல்வ கணபதி எம்பி செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரியில் நடைபெறாத ஓர் அசாதாரண சம்பவம் நடைபெற்றது. இதுபோன்ற சம்பவம் இனி நடமக்கால் இருக்க வேண்டும். அதற்காக காவல் துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து கொண்டிருக்கிறது. உள்துறை அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார். கொலையாளிகள் விரைவாக கண்டறியப்பட்டு போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைவு நீதிமன்றம் அமைத்து அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொலையாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்கும் வரை பாஜக ஓயாது. எங்களுடைய வருத்தத்தை எப்படி தெரிவிப்பது என்ற காலக்கட்டத்தில் இருக்கின்றோம். ஆனால் செயலில் செய்து காட்டுகின்றோம். புதுச்சேரி மண்ணில் வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடைபெறக் கூடாது. அதனால் காவல்துறை முடுக்கி விடப்பட்டிருக்கிறது. சிறுமிக்கு அஞ்சலி செலுத்த பாஜக சார்பில் எம்எல்ஏக்கள் வந்தனர். நான் ஊரில் இல்லாததால் என்னால் வர முடியவில்லை. அசாதாரண சூழ்நிலை நிலவும் போது, அதனை நாங்கள் அரசியலாக்கவும், அதில் ஆதாயம் தேடவும் விரும்பவில்லை.
கஞ்சா பிரச்சனை பல நாட்களாக புதுச்சேரியில் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் எதிர்கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எம்.பி வைத்திலிங்கம் ஆகியோர் இப்போது தான் போதைப் பொருள் வந்தது, அதனை தடுக்க தவறிவிட்டனர் என்றெல்லாம் பேசி வருகின்றனர். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவரே போதைப் பொருள் சம்பந்தமாக கேள்வி எழுப்பினார்.
எனவே, போதைப் பொருள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டிருக்கிறது. சிறுமி கொலை சம்பவத்தில் எதிர்கட்சியினர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். ஆனால் அது எடுபடாது. ஒவ்வொரு மாநிலமாக மக்களவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகின்றனர். புதுச்சேரி மாநிலத்துக்கான வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT