Last Updated : 14 Mar, 2024 02:08 PM

 

Published : 14 Mar 2024 02:08 PM
Last Updated : 14 Mar 2024 02:08 PM

என்ன செய்தார் தென்காசி தொகுதி எம்.பி தனுஷ் எம்.குமார்? - ஓர் அலசல்

தனுஷ் எம்.குமார்

தென்காசி: தேர்தல் நெருங்கிவிட்டால் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் வாக்குறுதிகள் மெய்சிலிர்க்க வைக்கும். வாக்குகளை கவரும் காந்தம் என்பதால் வாக்குறுதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் கடையம் ஒன்றியத்தின் வடக்கு பகுதிகள், கீழப்பாவூர் ஒன்றியத்தின் தெற்கு பகுதியில் உள்ள வறட்சியை போக்க ராம நதி - ஜம்பு நதி இணைப்புக் கால்வாய் திட்டம், வாசுதேவநல்லூர் அருகே செண்பகவல்லி தடுப்பணையை சீரமைப்பது, சங்கரன் கோவிலில் விசைத் தறி பூங்கா, தென்காசி தொகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழிற்சாலைகள், புளியங்குடியில் எலுமிச்சை சார்ந்த தொழில்களை உருவாக்குதல் போன்ற வாக்குறுதிகள் தேர்தல்தோறும் எதிரொலிப்பதும், தேர்தலுக்கு பின்னர் வெற்றி பெற்றவர்கள் வாக்குறுதிகளை மறந்துவிடுவதும் வாடிக்கையாக உள்ளது.

மேலும், தென்காசி மற்றும் சங்கரன்கோவிலில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வெளி வட்டச் சாலை, திருநெல்வேலி - தென்காசி நான்குவழிச் சாலை, தென்காசி மாவட்டம் வழியாக விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் கொல்லம்- திருமங்கலம் நான்குவழிச் சாலை, தென்காசியில் மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, சித்த மருத்துவக் கல்லூரி, வேளாண் விளை பொருட்களை பதப்படுத்தி சேமித்து வைக்க குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் என, பல்வேறு வாக்குறுதிகள் தென்காசி தொகுதி வாக்காளர்களால் நீண்ட காலமாக கேட்டுக் கேட்டு புளித்துப்போனவை.

இவற்றில் ஒரு சில வாக்குறுதிகள் மட்டுமே மெதுவாக செயல்வடிவத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. பெரும்பாலான வாக்குறுதிகள் காற்றில் பறந்துவிட்டன. அவை மீண்டும் வருகிற தேர்தலிலும் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில், தென்காசி மக்களவைத் தேர்தலில் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தனுஷ் எம்.குமார் அளித்த ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் முடிந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

குற்றாலத்தில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துதல். அணைகள், குளங்கள், கால்வாய்களை தூர்வாருதல். வன விலங்குகளால் பயிர்கள் சேதமடைவதை தடுத்தல். பூக்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் தென்காசி மாவட்டத்தில் சென்ட் தொழிற்சாலை அமைத்தல். தரணி சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் அண்டை மாவட்டங்களுக்கு கரும்புகளை அனுப்ப வேண்டிய நிலையில், கரும்பு விவசாயத்தை காத்தல். விவசாயம் சார்ந்த தொழில்களை அதிகரித்தல். தென்காசி வழியாக கூடுதல் ரயில்கள் இயக்குதல். கனிமவளங்கள் கடத்தலைத் தடுத்தல் போன்ற, பல்வேறு எதிர்பார்ப்புகளை வாக்காளர்கள் முன்வைக்கின்றனர்.

490 கேள்விகள் கேட்டவர்: தென்காசி தொகுதி எம்பி தனுஷ் எம்.குமார் தனது பணிகள் குறித்து கூறும்போது, “கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளதாக நம்புகிறேன். தொகுதிக்காகவும், பொதுவாகவும் 490 கேள்விகளை எழுப்பியுள்ளேன். இது இந்திய சராசரியை விட அதிகமாகும். 121 விவாதங்களில் பங்கேற்றுள்ளேன். 5 தனிநபர் மசோதா தாக்கல் செய்திருந்தேன், அதில் இரண்டை என்னால் கொண்டுவர முடிந்தது.

ரயில்வே துறையில் மின்மயமாக்கல் பணி, கூடுதல் ரயில்கள் என ரயில்வே சார்ந்து பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளேன். இன்னும் ஏராளமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரி செய்ய தமிழக, கேரள அரசுகள் மூலம் குழு அமைக்கும் முதல்கட்ட பணி நடந்துள்ளது. வரும் காலங்களில் இந்த திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

கொல்லம் - திருமங்கலம் நான்குவழிச் சாலையை மாற்று வழியில் நிறைவேற்ற கோரிக்கை விடுத்த போது, மத்திய அரசு அது நிறைவேறாத காரியம் என்று கூறிவிட்டது. தொடர்ந்து முறையிட்டதன் விளைவாக 60 மீட்டர் அகலம் இருந்த நான்கு வழிச்சாலை 40 மீட்டராக மாற்றப்பட்டது. அதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது குறைந்துள்ளது. புளியரை ரயில்வே பாலம் அருகே எஸ் வளைவு பகுதியில் சுற்றுச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி தொகுதியில் வேளாண்மை சார்ந்த தொழில்களை கொண்டுவர பல முறை மக்களவையில் பேசியுள்ளேன். பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. தென்காசியில் மாவட்ட மைய நூலகம், விளையாட்டு மைதானம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து வசதி இல்லாத ஆயிரப்பேரி பகுதியில் ஆட்சியர் அலுவலகம் அமைய இருந்ததை தடுத்து, தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். என்னால் முடிந்த அளவுக்கு திருப்திகரமாக பணியாற்றியுள்ளாக நம்புகிறேன்.

மத்திய அரசின் முட்டுக்கட்டையால் தென்காசியில் மருத்துவக் கல்லூரி தொடங்குவது தாமதமாகிறது. 2 ஆண்டுகளாக எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. இதுவரை, 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதனை அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிக்கும் சமமாக பகிர்ந்தளித்து திட்டப் பணிகளை நிறைவேற்றி உள்ளேன். மக்களவைக் கூட்டம் நடைபெறாத நாட்களில் தொகுதியில் முழு அளவில் இருந்து பணியாற்றி உள்ளேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x