Published : 14 Mar 2024 01:22 PM
Last Updated : 14 Mar 2024 01:22 PM
சென்னை: வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு கோயில்களில் கயிற்றால் ஆன விரிப்புகள் அமைக்கப்பட உள்ளதாகவும், முதல்கட்டமாக 48 முதுநிலை கோயில்களில் பக்தர்களுக்கு இலவச நீர்மோர் வழங்கப்படவுள்ளதாகவும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் கருங்கல் பாதிக்கப்பட்டு வெயிலின் தாக்கத்தால், சூடேறி இருக்கும் கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கயிற்றால் ஆன விரிப்புகளைப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளோம். மேலும், தமிழகத்தில் அதிகமான அளவில் பக்தர்கள் வருகைதரும் முதல்கட்டமாக 48 முதுநிலை திருக்கோயில்களுக்கு நாளை முதல் இலவச நீர்மோர் வழங்கப்பட உள்ளது. அதன்படி, வியாழக்கிழமை நாளை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும்.
தமிழக முதல்வர் மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவர். எனவேதான், வெயிலின் தாக்கம் தொடங்குவதற்கு முன்பாக இந்த திட்டத்தை செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் உத்தரவின் பேரில், நேற்று அனைத்து மண்டலங்களிலும் உள்ள திருக்கோயில்களில் உழவாரப் பணிகள் தொடங்கப்பட்டது. இந்தப்பணிகளுக்கான உபகரணங்கள், இதில் ஈடுபடுபவர்களுக்கான உணவு உள்ளிட்டவைகள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டன.
உலக முருகர் பக்தர்கள் மாநாட்டை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வரும் ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் பழநியில், உலக முருகர் பக்தர்கள் மாநாட்டை நடத்துவதற்கானப் பணிகளில் இந்துசமய அறநிலையத்துறை ஈடுபட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சோளிங்கரில் திருக்கோயில் ஒன்றுக்கு அமைக்கப்பட்ட ரோப் கார் மூலம் பயனடைந்த பக்தர்கள் முதல்வரை தொடர்ந்து பராட்டி வருகின்றனர்” என்றார்.
அப்போது அவரிடம் மத்திய சென்னை தேர்தல் பணிகள் எப்போது தொடங்கப்படும், என்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மத்திய சென்னையைப் பொறுத்தவரையில், தமிழக முதல்வர் சுட்டிக்காட்டுகிற வேட்பாளருக்கு வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற முயற்சியில்தான் ஈடுபட்டு வருகிறோம்.
மத்திய சென்னை தொகுதியின் தற்போதைய மக்களவை உறுப்பினர், 2014-ல் பதவியில் இல்லாத காலத்தில்கூட, பேரிடர், கரோனா,பொங்கல், ரம்ஜான் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் மக்களோடு கலந்திருந்தவர். 2014-19ல் அவர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக இல்லாவிட்டாலும் இவரை தேர்ந்தெடுக்கத் தவறிவிட்டோமே என்று மக்கள் கவலை அடைந்ததை காண முடிந்தது. 2019-ல் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, அவர் செல்லாத இடங்களே இல்லை.
மத்திய சென்னையில் அவர் காலடித் தடங்கள் பதியாத இடங்களே இல்லை எனும்படி, மக்கள் பணி ஆற்றியுள்ளார். ஆகவே, உதயசூரியனை வெகுவாக வரவேற்க மத்திய சென்னை தொகுதி மக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT