Published : 14 Mar 2024 10:28 AM
Last Updated : 14 Mar 2024 10:28 AM
அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விரும்பும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை அன்புமணி நடத்தி வருவதால் பாமக யாருடன் கூட்டணி என்ற இழுபறி நீடித்து வருகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமாக வாக்கு வங்கியை வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன.
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸை 2 முறை நேரில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகும் நிலையில் இருந்தது.
அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் விருப்பம் தெரிவித்த நிலையில், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி, பாஜகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புவதாக கூறப்படுகிறது.
அன்புமணியிடம் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய பாஜக குழுவினர் மத்திய அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அதிமுக கொடுப்பதைவிட கூடுதல் தொகுதிகளை வழங்குவதாக உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.
2004 - 2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணிக்கு, மீண்டும் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்காததால், பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட இருந்த நிலையில், அன்புமணியின் இந்த முடிவு ராமதாஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி ஆகியோரை நேற்று காலை அன்புமணி தனியாக சந்தித்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசியதாகவும், பாஜக - பாமக கூட்டணி உறுதியாகும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸும், பாஜகவுடன் கூட்டணி வைக்க அன்புமணியும் விரும்பும் நிலையில், இறுதியில் வெற்றி பெறப்போவது தந்தையா? மகனா? என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT