Published : 14 Mar 2024 06:05 AM
Last Updated : 14 Mar 2024 06:05 AM
சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் ஆகியோர் நேற்று விடுத்த அறிக்கை: தமிழக அரசு ஊழியர்கள் தற்போது 46 சதவீதம் அகவிலைப்படி உயர்வு பெறுகின்றனர். இத்துடன் அகில இந்திய நுகர்வோர் விலைவாசி குறியீட்டு எண் அடிப்படையில் நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே அடிப்படையில் போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு முன் தேதியிட்டு வழங்கும்போது அதற்குரிய நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டும்.
ஆனால் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. எனவே, போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 50 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்குவதுடன் அகவிலைப்படி நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வரைக் கேட்டுக் கொள்கிறோம்.
அதேபோல், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த பின்பும், அகவிலைப்படி உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை.
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் 90 ஆயிரம் பேருக்கு அகவிலைப்படி உயர்வு கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாததுடன், முறைப்படுத்தப்படாமல் மிகக் குறைவான ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். வயது முதிர்ந்த காலத்தில் மிகக்குறைவான ஓய்வூதியம் பெற்று கடும் துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே, ஓய்வூதியத்தை முறைப்படுத்தி கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT