Last Updated : 06 Feb, 2018 09:54 AM

 

Published : 06 Feb 2018 09:54 AM
Last Updated : 06 Feb 2018 09:54 AM

மூன்று மாநிலங்கள் இணையும் இடத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் முருகன் கோயில்: கட்டுமானப் பணிகளை தீவிரப்படுத்துகிறது ஆந்திர அரசு

மூன்று மாநிலங்கள் இணையும் இடத்தில் தமிழ் கடவுள் முருகனுக்கு ஆந்திர அரசு பிரம்மாண்ட கோயிலை கட்டி வருகிறது.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அந்திரி-நீவா இணைப்பு கால்வாய் திட்டம், நன்னியாலா வன உயிரினப் பூங்கா, குப்பம் உள்ளூர் விமான நிலையம், அரசு பொறியியல் கல்லூரி, நகர கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் பெரிய வணிக வளாகம், புல்லூர் கனக நாச்சியம்மன் கோயில் சுற்றுலாத் தலம், ராமகுப்பம் விளையாட்டு மைதானம் போன்றவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

ஆந்திர மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள குப்பம் தொகுதிக்கு கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். குப்பம் தொகுதியின் மேற்குப் பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டமும், கர்நாடகா மாநிலத்தில் கோலார் தங்கவயல் பகுதியின் எல்லையும் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது இப் பகுதிகளில் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்துள்ளனர்.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும் இப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கங்களை பின்பற்றியே வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு குப்பம் தொகுதியில் பிரம்மாண்டமான கோயிலை ஆந்திர அரசு கட்டிவருகிறது. குப்பம் தொகுதிக்கு மேற்கேயுள்ள குடிப்பல்லி அடுத்த குடிவொங்கா (கோயில் கானாறு) என்ற இடத்தில் முருகன் கோயில் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கெனவே சிறிய அளவில் இருந்த இந்த கோயில் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

கோயில் அமைந்துள்ள மலைக்கு மேற்கு பகுதியில் கர்நாடகா மாநிலமும், தெற்குப் பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டமும் அமைந்துள்ளன. இக் கோயிலைச் சுற்றி உட்பிரகாரம் அமைக்கும் பணிகளும், வெளிப் பிரகாரம் அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடக்கின்றன. இது மட்டுமின்றி கோவிலை பக்தர்கள் சுற்றிவர நடைபாதையும், சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

மலையின் கீழ்பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் முடி காணிக்கை கொடுக்கும் கட்டிடமும், அதன் அருகே நவீன குளியல் அறைகளும், உடைகள் மாற்றிக்கொள்ள தனித்தனி அறைகளும் அமைக்கப்படவுள்ளன. பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப மலைமீது நடைபயணமாக ஏறிவர படிக்கட்டுகளும், வாகனங்கள் மலை மீது ஏறி வர தார்ச் சாலையும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு விருந்தினர் விடுதிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

கோயில் கட்டுமானப் பணிகள் முடிந்தவுடன் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் தொடங்கப்படும் என கோயில் கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். கோயிலுக்கு முக்கிய விருந்தினர்கள் வந்து செல்ல மலை மீது ‘ஹெலிபேடு’ அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x