Published : 25 Feb 2018 07:40 PM
Last Updated : 25 Feb 2018 07:40 PM

சாலையோரம் வீசப்பட்ட தக்காளிகளை அள்ளிச்சென்ற மக்கள்: விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு இழப்பு

 

தக்காளி விளைச்சல் அதிகரித்த நிலையில் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால், விற்பனைக்கு சந்தைக்கு கொண்டு செல்ல கூட விலை கட்டுபடியாகாத நிலையில் விவசாயிகள் குப்பைகளிலும், சாலையோரங்களிலும் வீசிச்செல்லும் நிலை திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பகுதிகளில் காய்கறிசாகுபடி பரவலாக நடைபெறுகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்த நிலையில் காய்கறிகள் விவசாயத்தை ஆர்வத்துடன் விவசாயிகள் மேற்கொண்டனர். மூன்று மாதத்தில் காய்கறிகள் அறுவடைக்கு வர, விளைச்சல் அதிகரிப்பால் முட்டைக்கோஸ், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், கொத்தவரை, முள்ளங்கி என காய்கறிகள் பல கிலோ ரூ.10 க்கும் குறைவாகவே விற்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தற்போது விவசாயம் நல்லமுறையில் இருந்தும் கட்டுபடியான விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இதில் தக்காளி விவசாயம் செய்த விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

தக்காளி பறிப்பதற்கான கூலி, அதை வாகனத்தில் ஏற்றி ஒட்டன்சத்திரம் மார்கெட்டிற்கு கொண்டுவர வாடகை, என கணக்கு பார்த்தாலே விற்கும் விலைக்கு விவசாயிகள் தங்கள் கையில் இருந்து பணம் செலவழிக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பல விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். சிலர் பறித்து மார்க்கெட்டிற்கு கொண்டுவந்த நிலையில்

தரமான தக்காளி பழங்கள் பிரித்தெடுக்கும் போது கனிந்த பழங்களை குப்பையில் கொட்டும் நிலை ஏற்படுகிறது.

சில விவசாயிகள் தங்கள் வயல்களில் இருந்து தக்காளிளை பறித்து சாலையோரம் வீசிவிட்டு செல்கின்றனர். இவ்வாறு குப்பை மற்றும் சாலையோரம் கொட்டப்படும் தக்காளிகளை சிலர் தங்கள் வீட்டிற்கு எடுத்துச்செல்கின்றனர்.

இன்றைய நிலையில் ஒரு கிலோ தக்காளி ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.3 முதல் விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் கிலோ ரூ.5 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காய்கறி கமிஷன் கடை உரிமையாளர் ஆறுமுகம் கூறியதாவது:

வரத்து குறைந்தால் தான் தக்காளி விலை உயர வாய்ப்புள்ளது. மார்க்கெட்டிற்கு வரும் தக்காளியை வாங்குவதற்கு ஆள் இல்லை. இதனால் ஒரு நாள் வைத்து மறுநாள் விற்கலாம் என்றால் தக்காளி முழுமையாக பழுத்து விடுகிறது. முற்றிலும் கனிந்த தக்காளி உடைந்துவிடும் என்பதால் விற்பனைக்கு வாங்கிச்செல்பவர்கள் வாங்கமாட்டார்கள். எனவே அதுபோன்ற தக்காளி பழங்கள் குப்பைகளில் கொட்டியுள்ளனர்.

இன்னும் இரண்டு வாரங்களுக்கு இந்த நிலை தான் நீடிக்கும். வரத்து குறையத்துவங்கினால் தக்காளி விலை உயரவாய்ப்புள்ளது. விவசாயிகள் அப்போது தான் லாபம் பெறமுடியும், அதுவரை அவர்களுக்கு பேரிழப்பு தான், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x