Published : 14 Mar 2024 04:06 AM
Last Updated : 14 Mar 2024 04:06 AM
நாகர்கோவில்: எம்எல்ஏ பதவிக்கு இனி போட்டியிட மாட்டேன். மக்களவை தேர்தலில் மட்டுமே போட்டியிடுவேன் என, முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி நேற்று நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு வந்தார். அவரை எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ, பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் மீனாதேவ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸில் பெண்களுக்கு மரியாதை இல்லை. சட்டப்பேரவை யில் கூட பெண்களுக்கு முன் வரிசையில் இடம் அளிக்காத கட்சி காங்கிரஸ். பாஜகவில் எனக்கு கண்டிப்பாக பதவி கொடுப்பார்கள். அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த நாங்கள் வந்துள்ளோம். எந்த சுய நலமும் இல்லாமல் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். மக்கள் பணி மட்டுமே பிரதான பணி என நினைக்கக் கூடியது பாரதிய ஜனதா கட்சி. கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும் காங்கிரஸ் சார்பில் வாரிசுக்கு தான் சீட் கொடுத்து இருக்கின்றனர்.
அதனால் பணிகள் ஏதாவது நடந்திருக்கிறதா?. தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை தருவதை வரவேற்கிறேன். ஆனால் தாலிக்கு தங்கம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்த காரணத்தால் நிறுத்தி உள்ளார்கள். மகளிர் உரிமைத் தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும். எம்எல்ஏ பதவிக்கு இனி நான் போட்டியிட போவதில்லை. பாஜக தலைமை முடிவு செய்தால், மக்களவை தேர்தலில் மட்டுமே போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT