Last Updated : 13 Mar, 2024 09:29 PM

 

Published : 13 Mar 2024 09:29 PM
Last Updated : 13 Mar 2024 09:29 PM

வாட்ஸ்ப் அப் குழுவில் ‘தம்ஸ் அப்’ குறியீட்டுக்காக பணி நீக்கத்தை ஏற்க முடியாது: ஐகோர்ட்

மதுரை: அலுவலக வாட்ஸ்ப் அப் குழுவில் ‘தம்ஸ் அப்’ குறியீடு பதிவிட்டதற்காக ரயில்வே பாதுகாப்பு படை வீரர் பணி நீக்கம் செய்யப்பட்டதை தனி நீதிபதி ரத்து செய்தது சரி என உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

2017-ல் சக காவலர் ஒருவரால் ரயில்வே பாதுகாப்பு படை உதவி கமாண்டர் கொலை செய்யப்படுகிறார். இது தொடர்பான தகவல் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலக வாட்ஸ் அப் குழுவில் பகிரப்படுகிறது. அதை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் நரேந்திர சவுகான், ‘தம்ஸ் அப்’ குறியீட்டை பின்னூட்டமாக பதிவிடுகிறார்.

இதையடுத்து நரேந்திர சவுகான் தம்ஸ் அப் குறியீடு பதிவிட்டது உயர் அதிகாரி கொலையை கொண்டாடும் விதமாக இருப்பதாகக் கூறி, அவருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. பின்னர் விசாரணை நடத்தப்பட்டு சவுகான் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பணி நீக்கத்தை எதிர்த்து சவுகான் உயர் நீதிமன்ற கிளையில் ரிட் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த தனி நீதிபதி பணி நீக்கத்தை ரத்து செய்து அவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டார். இதற்கு எதிராக ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார்.

மேல்முறையீடு மனுவை விசாரித்து நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவு: ‘தம்ஸ்அப்’ குறியீடு என்பது ‘ஓகே’ என்பதன் மாற்று குறியீடு ஆகும். ‘தம்ஸ்அப்’ குறியீட்டை அதிகாரியின் கொடூர கொலையை கொண்டாடுவதற்கான குறியீடாக கருத முடியாது.

மேலும் கொலை செய்தியை மனுதாரர் அனுப்பவில்லை. வாட்ஸ்அப் குழுவில் வந்த தகவலை பார்த்து, அந்த தகவலை பார்த்துவிட்டதற்கான அத்தாட்சியாக ‘தம்ப்ஸ்அப்’ குறியீட்டை பதிவிட்டுள்ளார். மனுதாரர் மீது வேறு எந்த குற்றச்சாட்டும் இல்லை.

மனுதாரரின் விளக்கம் ஏற்புடையதாகவே இருக்கிறது. எனவே, மனுதாரரின் பணி நீக்கத்தை ஏற்க முடியாது. தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட வேண்டியதில்லை. மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x