Published : 13 Mar 2024 06:54 PM
Last Updated : 13 Mar 2024 06:54 PM
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைக்கப்பட்டதைத் தொடர்ந்து திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருக்கிறது என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும், அமைச்சரவையில் மீண்டும் பொன்முடியை சேர்க்க பரிந்துரைத்து ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால், தனது அமைச்சர் பதவியை இழந்தது மட்டுமின்றி, சட்டப்பேரவை உறுப்பினர் தகுதியையும் இழக்க நேர்ந்தது. பொன்முடி போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதி காலி என அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த மார்ச் 5-ம் தேதி திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அளித்தார்.
மக்களவைத் தேர்தலுடன் திருக்கோவிலூர் தொகுதியின் இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து, இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளையும் மாவட்ட நிர்வாகம் தொடங்கியது. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தது.
தமிழக சட்டப்பேரவைச் செயலருக்கு, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் நகல் கிடைக்கப்பெற்றது. இதைத் தொடர்ந்து திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருக்கிறது என்ற அறிவிப்பு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மேலும், பொன்முடியை மீண்டும் அமைச்சராக்குவதற்கான பதவி பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் மாளிகையின் உத்தரவைத் தொடர்ந்து இன்று அல்லது நாளை பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT