Published : 13 Mar 2024 09:14 PM
Last Updated : 13 Mar 2024 09:14 PM

மீண்டும் பைடன் Vs ட்ரம்ப் முதல் சரத்குமார் ‘உருக்கம்’ வரை | செய்தித் தெறிப்புகள் @ மார்ச் 13, 2024

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் பைடன் vs ட்ரம்ப்: அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சியை சார்பில் போட்டியிடுகிறார். அதேபோல் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடவுள்ளார். இருவரும் நேருக்கு நேர் களம் காணவிருப்பதால் அங்கே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

பாஜக வேட்பாளர் பட்டியல்: 2024 மக்களவைத் தேர்தலில் 72 தொகுதிகளுக்கான இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் தலா 20, குஜராத்தில் 7, ஹாியாணா மற்றும் தெலங்கானாவில் தலா 6 பேர் மற்றும் மத்தியப் பிரதேசம், இமாச்சல், திரிபுரா, தாத்ரா நாகர்ஹவேலி உள்ளிட்ட 72 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. முழு விவரம்: 2-ம் கட்ட பாஜக பட்டியல் வெளியீடு - 72 பேரில் முக்கிய வேட்பாளர்கள் யார் யார்?

மீண்டும் அமைச்சர் பதவி: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைக்கப்பட்டதைத் தொடர்ந்து திருக்கோவிலூர் தொகுதி காலியாக இருக்கிறது என்ற அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும், அமைச்சரவையில் மீண்டும் பொன்முடியை சேர்க்க பரிந்துரைத்து ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முழு விவரம்: பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி - ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை

மகளிருக்கு காங்கிரஸின் வாக்குறுதிகள்: வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

‘தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்’: "இந்திய தேர்தல் ஆணையம் எப்போதும் வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவாக உள்ளது. எஸ்பிஐ அளித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும். தேர்தல் பத்திரங்களை பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களுக்கு வெளியிடுவதில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்துகிறது" என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

“வாரிசு அரசியலில் நம்பிக்கை இல்லை!” - மம்தா: “எனது குடும்பமும் நானும் பாபன் பானர்ஜி உடனான உறவை முறித்துக் கொள்கிறோம். அவருடைய பல செயல்பாடுகளை நான் ஏற்கவில்லை. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் அவர் எதாவது பிரச்சினையை உருவாக்குகிறார். பேராசை பிடித்தவர்களை எனக்குப் பிடிக்காது. வாரிசு அரசியலில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே, பாபன் பானர்ஜியுடனான அனைத்து உறவையும் துண்டிக்க முடிவு செய்துள்ளேன்" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

சிஏஏ அமல் நடைமுறையும், மாநில அரசின் அதிகாரமும்: “மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இதை நடைமுறைப்படுத்த எந்த வகையிலும் தமிழக அரசு இடமளிக்காது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதேபோல் கேரளா, மேற்கு வங்க அரசுகளும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், குடியுரிமை வழங்குதல் என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் அதிகார வரம்பின் கீழ் வருவதால் இதில் மாநில அரசின் நிலைப்பாடு என எதுவும் இருக்க முடியாது. மாநில அரசுகள் இதனை அமலாகவிடாமல் தடுக்கவும் முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரிக்கு 31 புதிய திட்டங்கள்: கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு 31 புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.1.237.51 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர், ஈரோடு திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்ததுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 57 ஆயிரத்து 325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்டத்துக்கான 13 அறிவிப்புகள், ஈரோடு மாவட்டத்துக்கான 9 அறிவிப்புகள், திருப்பூர் மாவட்டத்துக்கான 5 அறிவிப்புகள், நீலகிரி மாவட்டத்துக்கான 4 அறிவிப்புகள் என மொத்தம் 31 திடங்களை அவர் அறிவித்தார். மேலும், "கொங்கு மண்டலம் தங்கள் கோட்டை எனக் கூறும் அதிமுக, கொங்கு பகுதிக்கு என்ன செய்தது? பொள்ளாச்சி சம்பவத்தில் தவறிழைத்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று அப்போதே உறுதி அளித்திருந்தேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு: அமலாக்கத் துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையை மார்ச் 18-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 18-ம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

“நினைத்த இலக்கை அடைய முடியவில்லை” - சரத்குமார்: “அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்து பற்றி பலரும் பலவிதமாக சித்தரித்து வருவதால், தன்னிலை விளக்கம்” அளிப்பதாக கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்ட சரத்குமார், “அரசியலில் நாம் நினைத்த இலக்கை அடைய முடியவில்லையே என்ற என் சிந்தனைக்கு, இந்த மக்களவைத் தேர்தல் ஓர் ஞானோதயமாக அமைந்தது” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

“தமிழகத்தில் கோலோச்சி வரும் இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக 2026-ல் பாஜக ஆட்சி அமைந்திட, நம் இலக்கையும், மக்களின் எண்ணங்களையும் இணைத்து பிரதிபலித்திட வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக தோன்றியது.

இந்த சிந்தனை என்னை உந்திக்கொண்டிருந்ததால், மக்கள் பணியில், பதவியில் இருந்தால்தான் நம் இலக்கை அடைய முடியும் என்ற எண்ணத்தை கடந்து, ஒரு மாபெரும் சக்தியாக இந்தியாவை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றிச் செல்கின்ற பாஜக உடனும், பாரத பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டிற்கும், நம் மாநிலத்திற்கும், நம் மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டும்.

அதை எண்ணி, எனது 28 ஆண்டுகள் அரசியல் அனுபவத்தையும், என் உழைப்பையும், என் இயக்கத்தினரின் உழைப்பையும் தமிழக மக்களுக்காகவும், தேசத்தின் ஒற்றுமைக்காகவும், தேசத்தின் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணித்திட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை, பாஜகவுடன் இணைத்து செயல்பட அனைவரின் ஆதரவுடன் முடிவெடுத்தேன்” என்று சரத்குமார் கூறியுள்ளார்.

உதகையில் மண்ணில் புதைந்து வடமாநில தொழிலாளி பலி: உதகையில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து விழுந்ததில், இரு வடமாநில தொழிலாளிகள் சிக்கிக் கொண்டனர். இருவரும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹரியாணா முதல்வர் நயாப் வெற்றி: ஹரியாணா மாநில சட்டபேரவையில் புதன்கிழமை நடந்த சிறப்பு கூட்டத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் புதிய முதல்வர் நயாப் சைனி வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது அமைச்சரவையுடன் செவ்வாய்க்கிழமை காலை ராஜினாமா செய்தார். தொடர்ந்து மாநிலத்தின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்.

தேர்தல் பத்திரம் விவகாரம்: எஸ்பிஐ பிரமாணப் பத்திரம் தாக்கல்: தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாக எஸ்பிஐ வங்கி உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, எஸ்பிஐ இந்தப் பிரமாணப் பத்திரத்தினைத் தாக்கல் செய்தது.

அதில், தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கிவிட்டதாகவும், பென் டிரைவில் இரண்டு கோப்புகளாக தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பாக்., வங்கதேச மக்களுக்கு பாஜக கதவைத் திறந்து விட்டுள்ளது”: சிஏஏ மூலம் பாகிஸ்தான், வங்கதேச மக்களுக்கு இந்தியாவின் கதவுகளை பாஜக திறந்து விட்டிருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரித்துள்ளார். மேலும் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அமல்படுத்தப்பட்டுள்ள இதன் மூலம் பொருளாதார பிரச்சினைகளில் இருந்து கவனம் திசைத் திருப்பப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு - சந்தேக நபர் கைது: கர்நாடகா மாநிலம் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் திருப்புமுனையாக வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்துள்ளனர். ஷபீர் என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த நபர் பெல்லாரியில் புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். ராமஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டு வெடிப்புச் சம்பவம் நடப்பதற்கு முன்பாக கேமராவில் பதிவான நபரின் நெருங்கிய கூட்டாளி ஷபீர் என்று நம்பப்படுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

காசாவில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் உயிரிழப்பு: கடந்த 4 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடந்த போர்கள், மோதல்களால் ஏற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பைவிட காசாவில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்று பாலஸ்தீனத்துக்கான ஐ.நா.வின் அகதிகள் மறுவாழ்வு மைய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x