Published : 13 Mar 2024 06:30 PM
Last Updated : 13 Mar 2024 06:30 PM
சென்னை: "பெண்களை கேவலப்படுத்துவது, அவதூறாக பேசுவது, பெண் குறித்து தவறான விஷயங்களைப் பரப்புவது, இது திமுகவின் டிஎன்ஏ. குஷ்புவின் டிஎன்ஏ கிடையாது. இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் என்னிடம் காட்டாதீர்கள். நான் தவறு செய்தால், குழந்தையாக இருந்தாலும் கீழே விழுந்து மன்னிப்புக் கேட்பேனே தவிர பயந்து ஓடமாட்டேன்" என்று குஷ்பு கூறியுள்ளார்.
தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி அண்மையில் பாஜக சார்பில் செங்குன்றம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,தமிழகத்தில் உள்ள தாய்மார்களு்ககு மாதம் ஆயிரம் ரூபாய் பிச்சைப் போடுவதால், அவர்களது வாக்குகளைப் பெற்றுவிடலாம் என திமுக நினைக்கிறது" என்று பேசினார். குஷ்புவின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தது.
தொடர்ந்து குஷ்புவின் பேச்சுக்கு, அமைச்சர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் நடுத்தர வாழ்க்கை முறை என்னவென்று தெரியுமா? அந்த ஆயிரம் ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கைப் பார்த்துப் பேசுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று கூறியிருந்தார். இந்நிலையில், குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக மகளிர் அணி சார்பில் பல்வேறு இடங்களில் குஷ்புவின் உருவப்படத்தை எரித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து குஷ்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது: "உண்மை எப்படி பயத்தைக் கிளப்பிவிடும் என்பதை அழகா பார்த்துக் கொண்டிருக்கிறேன். திமுகவில் இருக்கும் அத்தனை பேரும், அமைச்சர், பேச்சாளரில் இருந்து கட்சியின் கடைநிலை தொண்டர் வரை, அனைவரும் என்னைப் பற்றி பேசி வீடியோ வெளியிட்டுக் கொண்டுள்ளனர். நான் பேசிய பழைய ட்வீட் ஒன்றை எடுத்து, அதைவைத்து ஏதோ ஒன்றை கூறி வருகின்றனர்.
நான் எதையுமே டெலீட் செய்யாமல் இருக்கிறேன். அனைத்துமே என்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இருக்கிறது. நான் பேசும்போது ஒரு ஐடி விங்கோ, வார் ரூம் வைத்துக்கொண்டு நான் பேசுவது இல்லை. நேருக்கு நேர் பேசக்கூடிய தைரியம் எனக்கு இருக்கிறது. திமுகவில் நான் மிகவும் மரியாதை வைத்திருக்கக்கூடிய அமைச்சர் உள்பட, பலர் எனக்கு எதிராக எச்சரிக்கை விடுத்து ஒருசில விஷயங்களைக் கூறியிருக்கின்றனர்.
நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஏன் அவ்வளவு பயந்து உட்கார்ந்துகொண்டிருக்கிறீர்கள்? குஷ்பு பேசினால் அவ்வளவு பயமா? காரணம் குஷ்பு உண்மையை பேசுவா, தைரியமாக பேசுவாள். நான் பேசியதற்கு, தவறான அர்த்தம் எடுத்துக்கொண்டு அதை மட்டும் மக்களிடம் காட்டி, மக்களைத் திசைதிருப்பும் வேலையை திமுகவினர் செய்கின்றனர்.
நீங்கள், எந்தெந்த வகையில் மக்களை ஏமாற்றுவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் எனக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். டாஸ்மாக் எண்ணிக்கையை குறைப்பீர்களா? குறைக்கமாட்டீர்களா? டாஸ்மாக் எண்ணிக்கையை குறைப்பதாக, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தனர். 3,500 கி.கி எடை கொண்ட 2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் திமுகவைச் சேர்ந்த நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நான் பேசிய பழைய காணொளிகளையும், ட்வீட்களையும் எடுத்துப் போடுவது திமுகவின் டிஎன்ஏ. காரணம், நடப்பு பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு உங்களிடம் ஏதும் இல்லை.
மக்களுக்கு என்ன செய்தோம், என்ன செய்து வருகிறோம் என்பதை பற்றி பேசுங்கள். அதை சொல்வதற்கு உங்களுக்கு தைரியம் இல்லை, இருக்கவும் இருக்காது. காரணம், திமுக பற்றி எனக்கு நன்றாக தெரியும். அந்த தைரியம் உங்கள் தலைவருக்கும் இல்லை, உங்கள் யாருக்கும் இல்லை. சுற்றிவளைத்துப் பேசும் பழக்கம் குஷ்புவுக்கு கிடையாது. நேரடியாகத்தான் பேசுவேன்.
தமிழகத்தில் உள்ள தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்குப் பதிலாக டாஸ்மாக் எண்ணிக்கையை குறைத்தால், அவர்கள் பல ஆயிரங்களை சேமித்து, அவர்களது குடும்பங்களை நல்லபடியாக, மகிழ்ச்சியாக, தலைநிமிர்ந்து அவர்களுடைய குடும்பத்தை நடத்த முடியும். இதுதான் நான் கூறியது.
இந்த விஷயத்தை திசைத்திருப்பி, மக்களிடம் நான் பெண்களை கேவலப்படுத்தியது போல பேசியதாக திமுகவினர் கூறுகின்றனர். பெண்களை கேவலப்படுத்துவது, அவதூறாக பேசுவது, பெண் குறித்து தவறான விஷயங்களைப் பரப்புவது, இது திமுகவின் டிஎன்ஏ. குஷ்புவின் டிஎன்ஏ கிடையாது. இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் என்னிடம் காட்டாதீர்கள்.
நான் தவறு செய்தால், குழந்தையாக இருந்தாலும் கீழே விழுந்து மன்னிப்புக் கேட்பேனேத் தவிர பயந்து ஓடமாட்டேன். அரசியல், நாகரிகம், மேடை நாகரிகம், தைரியமாக பேச வேண்டிய விஷயங்களை முன்வைத்து பேச வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்கள் அனைத்தையும் எனக்கு சொல்லிக்கொடுத்தது, என்னுடைய ஆசான் மறைந்த முதல்வர் கருணாநிதி. அதை நீங்கள் அனைவரும் மறந்துவிட்டீர்கள், நான் மற்க்கவில்லை, மறக்கவும் மாட்டேன்.
என்னுடைய குரு எனக்கு என்ன சொல்லிக் கொடுத்தாரோ, அதை தான் நான் பேசினேன். அவரை அவமானப்படுத்தும் விதமாகவோ, கேவலப்படுத்தும் விதமாகவோ நான் என்றுமே பேசவும் மாட்டேன். ஆனால், உங்களுடைய புதிய தலைவருக்கு கீழே நீங்கள் எப்படியெல்லாம் பேச வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் என்பதை நான் அறிவேன். எனவே உங்கள் மீது எனக்கு கோபம் கிடையாது. ஆனால், பரிதாபமாக இருக்கிறது.
நீங்கள் இவ்வளவு வேலை செய்வதற்குப் பதிலாக, மத்திய அரசிடமிருந்து இவ்வளவு பணம் வந்தது. அதைவைத்துதான், நாங்கள் இத்தனை நல்லதை செய்திருக்கிறோம். பிரதமர் மோடி செய்துகொடுத்த நல்லத்திட்டங்களைத் தான் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம், என்று கூறுங்கள். அதை சொல்லமாட்டீர்கள். காரணம், உண்மைப் பேசுவதற்கு தைரியம் தேவை. கல்தூக்கி வீசுவீர்கள், புடவையைப் பிடித்து இழுப்பீர்கள், பெண்களை கேவலமாக பேசுவீர்கள், கீழ்த்தரமாக நடந்துகொள்வீர்கள், ஆனால், பெண்களை சமூகத்தின் நல்ல இடத்தில் வைத்து அழகுபார்க்கும் எண்ணம் திமுகவுக்கு கிடையாது. பெண்களுக்கு நான் எவ்வளவு பக்கப்பலமாக இருக்கிறேன் என்று அவர்களுக்குத் தெரியும்." என்று குஷ்பு அதில் பேசியுள்ளார்.
A simple message to our CM Thiru @mkstalin avl. pic.twitter.com/KeDQ1fHLZ8
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) March 13, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT