Published : 13 Mar 2024 06:03 PM
Last Updated : 13 Mar 2024 06:03 PM
தமிழகத்தில் சில தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென தீவிர முனைப்புக் காட்டி வருகிறது பாஜக. அதற்கு, முதல் படியாக சக்தி வாய்ந்த கூட்டணியை உருவாக்க முயன்றது. ஆனால், கடந்த முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்த தமிழகத்தின் பிரதான திராவிட கட்சியான அதிமுக தனது தலைவர்கள் குறித்து பாஜக முன்வைத்த விமர்சனங்களைச் சுட்டிக்காட்டி, கூட்டணியிலிருந்து வெளியேறியது. இருப்பினும் துவண்டு போகாத பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனை தூது அனுப்பி அதிமுகவைக் கூட்டணிக்குள் கொண்டு வர தீவிர முயற்சியில் இறங்கியது. அதுவும் பலன் தரவில்லை. இந்த நிலையில், அதன் அடுத்த நகர்வாக அதிமுகவில் முக்கியமான நபர்களைக் கட்சிக்குள் இழுக்க முயன்றது.
‘ஆள் சேர்ப்பு வியூகம்' முதல் முயற்சி? - பிப்ரவரி 7-ம் தேதி, டெல்லி பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில், கோவை, கரூர், தேனி, காங்கேயம் உள்படப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 14 பேர் பாஜகவில் இணைந்தனர். இதில், கட்சியில் சேராதவர்கள் பெயரும் குறிப்பிட்டது சர்ச்சையானது.
தவிர, பாஜகவில் இணைந்ததாகச் சொல்லப்பட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ’பீல்டு அவுட்’ ஆனவர்கள். அவர்களால் எந்தப் பயனுமில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, மற்ற மாநிலங்களில் எப்படி பிற கட்சியினரைப் பாஜகவில் இணைத்து தன் பலத்தை நிரூபிக்குமோ, அதுபோல் தமிழகத்திலும் அப்படியொரு ஸ்டண்ட் செய்ய நினைத்தது பாஜக. ஆனால், பழைய நிர்வாகிகளால் எந்தப் பலனுமில்லை என்னும் விமர்சனங்களால் அவர்களின் ’ஆள் சேர்ப்பு வியூகம்’ தவிடுபொடியானது.
’ஆள் சேர்ப்பு வியூகம்' இரண்டாம் முயற்சி! - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய ’என் மண்… என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழா பல்லடம் மாதப்பூரில் நடந்தது. அதில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். இந்தப் பொதுக்கூட்டம் பாஜகவினர் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தப் பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணையப்போவதாகச் சொல்லப்பட்டது. குறிப்பாக, அதிமுகவிலிருந்து முக்கிய தலைவர்கள் சிலர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சியை பல்லடத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் 26-ம் தேதி நடத்தத் திட்டமிட்டது பாஜக. ஆனால், கட்சியில் இணைய யாரும் வராததால் அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இப்படியாக, பாஜகவின் ஸ்டன்ட் முழுவதும் தோல்வியைத் தழுவியது.
திமுக மீது நேரடி விமர்சனம்! - தமிழகத்தில் மோடி வருகை தரும்போதெல்லாம் ‘டார்கெட் தமிழ்நாடு’ என்பதற்கும் மேலாக ‘டார்கெட் திமுக’ எனச் சொல்லும் அளவிற்கு அக்கட்சியின் மீது கடும் விமர்சனங்களை வெளிப்படையாக வைத்து வருகிறார் மோடி. குறிப்பாக, திமுக மீது குடும்ப கட்சி, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கட்சி, மாநில மக்கள் மீது நலன் இல்லாமல், தன் குடும்பத்தை வளர்க்கும் கட்சி எனப் பல தரப்புகளில் விமர்சனத்தை வைத்தார்.
அதுமட்டுமில்லாமல், திமுக எம்பிக்கள் அமைச்சர்கள் உள்ள மேடைகளில் அவர்களின் பெயரைக் கூட குறிப்பிடாமல் கடந்து சென்றார். குறிப்பாக, குலசேகரப்பட்டிணத்தில் திறக்கப்பட்ட ராக்கெட் ஏவுதளத்தின் தொடக்க விழாவில் மேடையிலிருந்த தூத்துக்குடி எம்பி கனிமொழி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு ஆகியோர் பெயர்களை உச்சரிக்காமல் கடந்து சென்றார். இப்படியாக, தமிழகத்தைப் பொறுத்தவரை இரட்டை குழல் துப்பாகியாக இரு திராவிட கட்சிகளை எதிர்த்துக் களமாடி வருகிறது பாஜக.
பாஜகவின் கிளியர் கட் வியூகம்! - திமுகவை வெளிப்படையாக விமர்சித்து அரசியல் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால், அதிமுகவிடம் வேறு விதமான வியூகங்களைக் கையாள்கிறது. குறிப்பாக, உள்ளடி வேலைகளைச் செய்கிறது பாஜக. அதிமுகவிலிருந்து ஆட்களைப் பாஜகவுக்குள் கொண்டுவர பல முயற்சிகளை மேற்கொள்கிறது. அதன் சில முன்னெடுப்புகளை மேலே குறிப்பிட்டோம். சமீபத்தில், அதிமுகவின் மைலாப்பூர் முன்னாள் எம்எல்ஏ ராஜலட்சுமி பாஜகவில் இணைந்திருக்கிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக பாதை மாறிவிட்டது எனக் கூறி பாஜகவில் இணைந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். இன்னும் பலர் இணைவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கிறது பாஜக.
அதிமுக பிரமுகர்களைப் பாஜகவில் இணைத்துக்கொள்வதால் பாஜக சொல்லும் செய்தி என்ன? - அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக வலுவிழந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால், பாஜகவின் நோக்கம் சில தலைவர்களைப் பாஜகவுக்குள் கொண்டு வந்து தங்களை அதிமுகவின் மாற்றாக முன்னிறுத்தலாம். அதனால்தான் மோடியும் அதிமுகவின் முக்கிய தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசுகிறார்.
அதேபோல், பாஜக - அதிமுக இடையே பல ஒற்றுமைகள் நிலவுவது அதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, இரு கட்சிகளும் கொங்கு மண்டலத்தில் சற்றே வலிமையான கட்சிகளாக இருக்கின்றன. இதனால், அதிமுகவின் கொங்கு பலத்தைத் தன்னகத்தே கொண்டுவரத் திட்டமிடுகிறது பாஜக. அதனால் பாஜக பொதுக்கூட்டங்களைக் கொங்குப் பகுதிகளில் நடத்துகிறது. அதேபோல், அவர்களின் ஆட்சேர்ப்பு டார்கெட்டும் கொங்குப் பகுதியாகத்தான் இருக்கிறது என்பதை உற்றுநோக்க வேண்டும்.
தமிழகத்தில் வெற்றி பெற திராவிட கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்தால் மட்டும் போதாது, திராவிட கட்சியாக மாறிவிட வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டுதான் அதிமுகவிலிருந்து ஆள்சேர்க்க பாஜக முயல்கிறது.
அதேவேளையில், ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக மீதும் விமர்சனம் வைத்தால், தேர்தல் நேரத்தில் மக்கள் மாற்றுக் கட்சிப் பக்கம் திரும்புவர். எனவே, இரு திராவிட கட்சிகளுக்கு எதிராக இரு வேறு வியூகங்களைப் பாஜக கையில் எடுத்து கம்பு சுற்றுகிறது. ஆனால், அதற்குப் பலன் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT