Published : 13 Mar 2024 04:02 PM
Last Updated : 13 Mar 2024 04:02 PM
சென்னை: சென்னையிலிருந்து விக்கிரவாண்டி- கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான கே.பாலு தாக்கல் செய்த பொதுநல மனுவில், "சென்னையிலிருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி,நெய்வேலி கும்பகோணம் வழியாக செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு, நான்கு வழி சாலையாக மாற்றும் திட்டம் அமல்படுத்தப்பட்டு இன்னும் பணிவுகள் முடிவடையவில்லை. இதனால், சுமார் 160 கிலோமீட்டர் சாலை மிக மோசமாக உள்ளது.
விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ஆண்டிமடம், வழியாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு அதிகம் சிரமம் ஏற்படுகிறது.
நான்கு வழி சாலை இல்லாத விக்கிரவாண்டி -தஞ்சாவூர் சாலையில் டோல் கட்டணம் நூறு ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. எனவே சாலைப் பணிகள் முடியும் வரை டோல் கட்டணம் வசூலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் சாலை சீரமைப்புபணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், இந்த சாலைப் பணிகள் மூன்று கட்டமாக நடைபெற்று வருகிறது. விரைவாக பணிகளை முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2020-ல் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கஜா, நிவர் புயல்களின் காரணமாக பணிகள் தாமதமானது. மேலும் வீராணம் நீர் குழாய் பதிப்பு பணிகளை மாற்றுவதற்கு மாற்று இடம் கையகப்படுத்த தாமதம் ஏற்பட்டதாலும், சாலை அமைக்கும் பணிகள் தாமதமானது, என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 7 ஆண்டுகளாக பணிகளை ஏன் இன்னும் பணிகளை முடிக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அச்சாலைப் பணிகள் எந்த நிலையில் உள்ளன? என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT