Published : 13 Mar 2024 03:31 PM
Last Updated : 13 Mar 2024 03:31 PM

‘ஒரு தொகுதி வேண்டும்’ - அதிமுகவுடன் மன்சூர் அலிகான் கூட்டணிப் பேச்சு

சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி இணைந்து போட்டியிடுவது தொடர்பாக அக்கட்சித் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் புதன்கிழமை அதிமுக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

மக்களவைத் தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவர் மன்சூர் அலிகான், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோருடன் மன்சூர் அலிகான் சந்தித்து பேசுவார்த்தை நடத்தினார். இதில் அதிமுக கூட்டணியில் தனக்கு ஒரு தொகுதி ஒதுக்க வேண்டும் என்றும், அப்படி ஒதுக்கும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் அதிமுகவுக்காக பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்றும் மன்சூர் அலிகான் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக இன்று காலை மன்சூர் அலிகான் தலைமையிலான குழுவுடன் சென்று, அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமி தலைமையிலான குழுவின் அழைப்பின் பேரில் பேச்சுவார்த்தை நடத்தினோம். இன்னும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்கிறது.

அதிமுக தவிர்த்து வேறொரு பெரிய கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாங்கள் ஒரு தொகுதியில் போட்டியிட உறுதியாக கேட்டு வருகிறோம். நாடாளுமன்றத்தில் எளியவர்களின் குரலாக தமிழகத்தின் உரிமைகளைப் பெற்றுத்தருவதில் உறுதியாக இருக்கிறோம். இந்திய ஜனநாயகப் புலிகள் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ் தேசிய புலிகள் என இருந்த தனது கட்சியின் பெயரை ‘இந்திய ஜனநாயக புலிகள்’ என மன்சூர் அலிகான் பெயர் மாற்றம் செய்தார். தொடர்ந்து வரும் மக்களவைத் தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடுவேன் என அவர் கூறியிருந்தார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x