Published : 13 Mar 2024 06:49 PM
Last Updated : 13 Mar 2024 06:49 PM
திண்டுக்கல்: தென்னிந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றிபெற்ற திண்டுக் கல் தொகுதி கிடைத்துள்ளதால் மார்க்சிஸ்ட் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல், மதுரை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் தொகுதியில் கடந்த முறை திமுக வேட்பாளர் ப.வேலுச்சாமி 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பா.ம.க. வேட்பாளரை தோற்கடித்தார். இது தென்னிந்தியாவிலேயே அதிக வித்தியாசமாகும். அமைச்சர்களாக ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் உள்ள நிலையில் திண்டுக்கல்லில் திமுகவின் வெற்றி தொடரும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது திமுகவினரிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் எப்படியும் திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என 2 அமைச்சர்களுக்கும் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. மார்க்சிஸ்ட் கட்சியினரும் முழுக்க முழுக்க திமுகவினரை நம்பியே தேர்தல் பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளனர்.
மார்க்சிஸ்ட் மகிழ்ச்சி: திண்டுக்கல் தொகுதி கிடைத்துள்ளதால் மார்க்சிஸ்ட் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். திண்டுக்கல்லில் 3 முறை போட்டியிட்ட அக்கட்சியைச் சேர்ந்த பாலபாரதி எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2 தேர்தல்களாக மார்க்சிஸ்ட் போட்டியிட்ட போதிலும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மக்களவைத் தொகுதி கிடைத்துள்ளதால் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் மார்க்சிஸ்ட் கட்சியினர் உற்சாகமாக தேர்தல் களம் இறங்க உள்ளனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறிய தாவது: திண்டுக்கல் தொகுதி கிடைத்தது மகிழ்ச்சி. கூட்டணிக் கட்சியின ருடன் இணைந்து தேர்தலில் வெற்றியைப் பெறுவோம், என்றார்.
அதிமுகவினர் உற்சாகம்: திண்டுக்கல்லில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்ட போதும், பலரும் மனு செய்ய தயக்கம் காட்டினர். கட்சியில் உள்ளோர் பலரும் பின் வாங்கியதால் யாரேனும் தொழிலதிபரை வேட்பாளராக நிறுத்தலாம் என்ற எண்ணத்தில் தான் அதிமுக தலைமை இருந்தது. தற்போது திண்டுக்கல்லில் திமுக நேரடியாக களம் இறங்கவில்லை என்ற அறிவிப்பு வரவே அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் வேட்பாளர் யார்? - மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் வரும் 15-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாநில நிர்வாகிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்று தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.
இதில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மற்றும் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மூன்று முறை திண்டுக்கல் எம்.எல்.ஏ.வாக இருந்த பாலபாரதி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகிய தொகுதி சார்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
மேலும் தொகுதி சாராத மதுரையைச் சேர்ந்த கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், சென்னையைச் சேர்ந்த மத்திய குழு உறுப்பினர்கள் சண்முகம், சம்பத் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. இவர்களில் யாரேனும் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT