Published : 13 Mar 2024 05:25 AM
Last Updated : 13 Mar 2024 05:25 AM
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.85,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 10 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளையும் தொடங்கி வைத்தார். அசன்சோல் - ஹதியா மற்றும் திருப்பதி - கொல்லம் இடையிலான 2 புதிய பயணிகள் ரயிலையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அகமதாபாத்தில் உள்ள பிரத்யேக சரக்கு வழித்தடத்தின் (டிஎப்சி) செயல்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, சபர்மதி பகுதியில் இருந்து திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
நான் எனது வாழ்க்கையை ரயில்வே தண்டவாளத்தின் மீதுதான் தொடங்கினேன். அதனால், நமது ரயில்வே முன்பு எவ்வளவு மோசமாக இருந்தது என்பது எனக்கு நன்றாக தெரியும். முந்தைய அரசாங்கத்தில் இருந்தவர்கள் சுயநலனுக்கு முன்னுரிமை அளித்ததற்கு ரயில்வே துறை பலிகடா ஆக்கப்பட்டது.
2014-ம் ஆண்டுக்கு முன்பு வடகிழக்கு பகுதியில் 6 தலைநகரங்களில் ரயில் இணைப்பு இல்லை. 10,000-க்கும் மேற்பட்ட ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் இருந்தன. 35 சதவீதரயில் பாதைகள் மட்டுமே மின்மயமாக்கப்பட்டிருந்தன. ஊழல் மற்றும் நீண்ட வரிசைகளால் ரயில்வே முன்பதிவுகள் பாதிக்கப்பட்டன.
அந்த நரக நிலைமைகளில் இருந்து ரயில்வேயை வெளியே கொண்டு வருவதற்கான மன உறுதியை எங்கள்அரசு வெளிப்படுத்தியுள்ளது. இப்போது ரயில்வே வளர்ச்சி என்பது அரசின் முன்னுரிமைகளில் ஒன்று.
இந்த 10 ஆண்டுகளில் ரயில்வேக்குபட்ஜெட்டில் சிறப்பு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு அத்துறையின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போதைய அடிக்கல் நாட்டு விழா என்பது இன்றைய இளைஞர்களின் நாளைய பிரகாசமான எதிர்காலத்துக்கான உத்தரவாதம்.
உலக பொருளாதார சக்திகளுக்குஇணையாக நாடு வளர்ச்சி பெற்று வருகிறது. பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடாக இந்தியா மாறி வருவதில் ரயில்வேயின் பங்களிப்பு முக்கியமானது.
முன்பு செய்ததைவிட கடந்த 10ஆண்டுகளில் ரயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு 6 மடங்கு அதிகமான தொகையை செலவிட்டுள்ளது. 2024-ம் ஆண்டின் இரண்டு மாதங்களில் மட்டும் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் 50,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
விரைவு சக்தி சரக்கு முனைய கொள்கையின்கீழ், நிலக் குத்தகை கொள்கை எளிமைப்படுத்தப்பட்டு, இணையதளம் மூலம் வெளிப்படைத்தன்மைக்கு வழிவகுக்கப்பட்டுள்ளதால், சரக்கு முனையத்தின் கட்டுமானம் அதிகரித்துள்ளது
கடந்த 10 ஆண்டுகால உழைப்பு என்பது ஒரு டிரெய்லர் மட்டுமே. நான் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது.
தற்போது நாட்டின் பெரும்பாலான மாநிலங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் கிடைத்துள்ளன. நாட்டில் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை ஏற்கெனவே சதமடித்துள்ளது. தற்போது புதிய சேவைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
வந்தே பாரத் கட்டமைப்பு நாட்டின் 250 மாவட்டங்களை தொட்டுள்ளது. மக்களின் விருப்பத்துக்கு மதிப்பு அளிக்கும் வகையில், வந்தே பாரத் வழித்தடங்கள் நீட்டிக்கப்படுகின்றன.
எங்களை பொருத்தவரை, இந்த வளர்ச்சி திட்டங்கள் அரசைஅமைப்பதற்காக அல்ல. இந்த தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்திலேயே அனைத்து வளர்ச்சி திட்டங்களும் தொடங்கப்படுகின்றன. முந்தைய தலைமுறையினரின் பிரச்சினையை அடுத்த தலைமுறை எதிர்கொள்ளாது. இது மோடியின் உத்தரவாதம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் ரூ.400 கோடி ஏக்தா மால்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்திய கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய தயாரிப்புகளின் வளமான மற்றும் மாறுபட்ட பாரம்பரியத்தை ஆதரிப்பதை இலக்காககொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT