Published : 13 Mar 2024 06:30 AM
Last Updated : 13 Mar 2024 06:30 AM
சென்னை: இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆதாயத்துக்காக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாபெரும் வரலாற்று பிழையை மத்திய அரசு செய்துள்ளது.
அகதிகளுக்காக கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தை இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் எதிராக அமல்படுத்த நினைத்தால் அதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. இதற்கு எதிராக நாட்டு மக்களுடன் இணைந்து அதிமுக ஜனநாயக ரீதியாகவும் போராடும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நாட்களே இருக்கும் நிலையும் குடியுரிமை சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இது அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது பிரிவை மீறும் செயலாகும்.
தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைதிருப்பவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சிக்கும் சிஏஏ திட்டத்தை தமிழகத்துக்குள் அனுமதிக்க மாட்டோம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: காஷ்மீர் சிறப்பு உரிமைப் பறிப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மோசடியான தீர்ப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் என இந்தியாவை சட்டப் பூர்வமாகவே இந்து ராஷ்டிரமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
குடியுரிமை சட்டத் திருத்தம் இந்தியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் முஸ்லிம்களை மட்டும் தனிமைப்படுத்தி, ஒதுக்குகிறது. இதனை நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: மதத்தால், மொழியால், ஜாதியால், உணர்வால் ஒற்றுமையாக இணைந்து கலாச்சாரம் நிறைந்த நாடாக உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இந்தியா திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் நாட்டு மக்களை பிளவுபடுத்துவதை தேமுதிக என்றைக்கும் ஏற்காது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்: மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அறிவித்திருப்பது மக்கள் கவனத்தை திசை திருப்பி, மத உணர்ச்சிகளை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாகும். பாஜக அரசின் வன்மமும், வெறுப்பும் நிறைந்த இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அறிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019-ல் இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தபோதே அதை எதிர்த்து தமிழகத்தில் முதல்முதலாக உச்ச நீதிமன்றத்தை நாடியது மநீம கட்சிதான். மக்களை மதம், மொழி, இனத்தால் பிளவுபடுத்தும் முயற்சிகளை முறியடிப்போம். தேசம் காப்போம்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தியும், இலங்கை தமிழர்களை புறக்கணித்தும் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆணை வெளியிட்டிருப்பது கண்டனத்துக்குரியது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டை மத ரீதியாகப் பிரிக்கவே பாஜகவின் இச்செயல் வழிவகுக்கும்.
தவாக தலைவர் தி.வேல்முருகன்: மத்திய அரசின் குடியுரிமைச் சட்ட திருத்தம் இந்தியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் இஸ்லாமியர்களை மட்டும் தனிமைப்படுத்தி, ஒதுக்குகிறது. இது ஜனநாயகத்துக்கும், மதசார்பின்மைக்கும் எதிரானது. இந்தியாவின் அடித்தளத்தையே இது சிதைத்துவிடும்.
தவெக தலைவர் விஜய்: சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழகத்தில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்.
இவர்களுடன் தமிழ்நாடு முஸ்லீம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் ஆர். அப்துல் கரீம், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் உள்ளிட்டோரும் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT