Published : 13 Mar 2024 08:32 AM
Last Updated : 13 Mar 2024 08:32 AM
திருவண்ணாமலை: பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக முதியவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி சர்வேயர் மற்றும் கணினிஉதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரம் ஆற்றங்கரைத் தெருவில் வசிப்பவர் வெங்கடேசன்(70). நெசவுத் தொழிலாளியான இவர், வயது மூப்பு காரணமாக ஊதுவத்தி விற்பனை செய்கிறார். இவருக்கு, வருவாய்த் துறைமூலம் கடந்த 2008-ல் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதன் அருகே, உரிமை மாற்று ஆவணம் மூலம் மேனகா என்பவரிடம் 1999-ல் வீட்டுமனை பெற்றுள்ளார். இந்த 2 இடத்தையும் மகன் பாலமுருகன் பெயரில் எழுதி வைப்பதற்காக, சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அப்போது, உரிமை மாற்று ஆவணமாகப் பெறப்பட்டுள்ள வீட்டு மனைக்கு பட்டா பெயர் மாற்றம் செய்து, வெங்கடேசன் பெயரில் கிரயம் செய்தால் மட்டுமே, அவரது மகன் பெயருக்கு வீட்டு மனையை மாற்ற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, செய்யாறில் கடந்த டிச. 20-ம் தேதி நடைபெற்ற, மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் மனு அளித்துள்ளார். எனினும், உரிய நடவடிக்கைஎடுக்கவில்லை. பின்னர், திருவத்திபுரம் நகராட்சி சர்வேயர் கன்னிவேலை தொடர்புகொண்டுள்ளார்.
ரூ.40 ஆயிரம் லஞ்சம்: அப்போது, பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.40 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறு கன்னிவேல் கேட்டுள்ளார். தனக்கு வருமானம் இல்லாததால் அவ்வளவு தொகை தர முடியாது என வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ரூ.20 ஆயிரமாவது கொடுத்தால் மட்டுமே, பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன், இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அவர்களது அறிவுரையின்பேரில், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் பணியில் இருந்த கன்னிவேலிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சப் பணத்தை நேற்று கொடுக்கச் சென்றபோது, கணினி உதவியாளர் மாதவனிடம் கொடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வெங்கடேசன் கொடுத்த லஞ்சப் பணத்தை தற்காலிக கணினி உதவியாளர் மாதவன் பெற்றுக்கொண்டார். அப்போது, டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் கன்னிவேல், மாதவன் ஆகியோரைக் கைது செய்தனர். தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT