Published : 13 Feb 2018 12:56 PM
Last Updated : 13 Feb 2018 12:56 PM
பிஏபி பாசன திட்டத்தில் போதிய தண்ணீர் கிடைக்காத விவசாயிகள் மழைக் காலங்களில் அவற்றை சேமிக்கும் வகையில் மிகப்பெரிய தார்பாய் தொட்டிகள் அமைத்து வருகின்றனர்.
பரம்பிக்குளம் ஆழியார் பாசனத்திட்டம் (பிஏபி) மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.77 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகின்றன. இவை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் 1 டிஎம்சி நீர் என கணக்கிட்டு விநியோகிக்கப்படுகிறது.
கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாதது, முறைகேடாக தண்ணீர் எடுக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகளுக்கு உரிய தண்ணீர் விநியோகிக்கப்படுவதில்லை.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக பாசன பரப்பில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களை காற்றாலைகள், தொழிற்சாலைகள், வீட்டுமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு விற்று விட்டு மாற்றுத்தொழில் தேட தொடங்கியுள்ளனர்.
அணை கட்டியபோது இருந்த அதே 3.77 லட்சம் ஏக்கர் இன்றைய நிலையில் இல்லை. ஆனாலும் தண்ணீர் பற்றாக்குறை தொடந்து அதிகரித்து வருவது விவசாயிகளுக்கு புரியாத புதிராக உள்ளது.
இந்நிலையில், விவசாயத்தையே தொழிலாக கொண்ட சிலர் பயிர்களை காக்க வேண்டும் என்ற நோக்கில் மிகப்பெரிய தார்ப்பாய் தொட்டிகள் அமைத்து அதில் மழை நீர் சேகரிக்கத்தொடங்கியுள்ளனர்.
உடுமலை அருகே செஞ்சேரி மலை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் சிலர் 3 கோடி லிட்டர் நீரை சேமிக்கும் திறன் கொண்ட தொட்டிகளை உருவாக்கி உள்ளனர். இதனால் மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து ஆண்டு முழுவதும் பயிர்களை காக்கலாம் என்கின்றனர் நம்பிக்கையுடன்.
விவசாயி மகேஷ்குமார் ‘திஇந்து’விடம் கூறியதாவது: என் தந்தை காலத்தில் கிணறுகளில் வற்றாத நீர் இருந்தது. என்னுடைய காலத்தில் அவை வறண்டு விட்டன. 350 அடி ஆழத்தில் அமைக்கப்பட்ட ஆழ்குழாயில் தற்போது 1500 அடி ஆழம் வரை அமைத்தும் தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. எனவே அடுத்த தலைமுறையின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
பிஏபி திட்டத்தில் எங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை 5.5 லட்சம் லிட்டர் நீர் விநியோகிக்கப்பட வேண்டும். 2 லட்சம் லிட்டர் மட்டுமே கிடைக்கிறது. பற்றாக்குறையை சமாளிக்க லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வருகிறோம். இதனால் நமக்கு நாமே என்ற அடிப்படையில் நிலத்தில் தண்ணீர் உறிஞ்சாத தார்பாய் தொட்டிகள் அல்லது சிமென்ட் தொட்டிகள் அமைத்து நீர் சேமிப்பில் ஈடுபட்டுள்ளோம்.
இதன்மூலம் 1 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி அமைக்க 125-க்கு 125 அடி நீள அகலம், 30 ஆழம் கொண்ட தொட்டிகளில் பிவிசி முலாம் பூசப்பட்ட தார்பாய் அமைக்கப்படுகிறது. இதற்கு ரூ.12 லட்சம் செலவாகும். சராசரியாக ஆண்டுக்கு 100 நாட்கள் கிடைக்கும் மழை நீரை இதில் சேமித்து 200 நாட்களுக்கு நீரை பயன்படுத்தலாம் என்றார்.
வேளாண் பொறியியல்துறை பொறியாளர் ஒருவர் கூறியதாவது: எங்களது துறை சார்பாக மழை நீர் சேகரிக்க தடுப்பணைகள், பண்ணைக்குட்டைகள், கசிவு நீர் குட்டைகள் அமைக்கப்படுகின்றன.
இவை 100 சதவீத மானியத்தில் மேற்கொள்ளப்படும். ஆண்டுக்கு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது. இவற்றால் ஒன்றிய அளவில் ஓரிரு விவசாயிகள் மட்டுமே பயன்பெற முடியும். செஞ்சேரிமலை பகுதியில் விவசாயிகள் தாமே முன் வந்து செய்து வரும் பணிகள் மிகவும் வரவேற்கக் கூடியதுஎன்றார்.
தன்னெழுச்சியாக ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT