Last Updated : 12 Mar, 2024 05:13 PM

 

Published : 12 Mar 2024 05:13 PM
Last Updated : 12 Mar 2024 05:13 PM

ராமேஸ்வரம் கோயிலில் ஆவுடையார் பொன்கவசம் சாத்தக் கோரி வழக்கு: மாவட்ட ஆட்சியர், எஸ்பி பதிலளிக்க உத்தரவு

மதுரை: ராமேஸ்வரம் ராமநாதசுவாமிக்கு ஆவுடையார் பொன் கவசம் சாத்தக்கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர், எஸ்பி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற கோபி ஆச்சார் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ராமாயண காலத்துடன் தொடர்புடையது. பகவான் ஸ்ரீராமரால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ராமநாதசுவாமிக்கு நித்தியபடி ஆவுடையார் பொன் கவசம் சாத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆவுடையார் பொன் கவசம் 2015-க்கு பிறகு ராமநாதசுவாமிக்கு அணிவிக்கப்படவில்லை. கேட்டதற்கு ஆவுடையார் பொன்கவசத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் சுவாமிக்கு சாத்தப்படாமல் சின்னக் கருவூலத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

ஆவுடையார் பொன்கவசத்தை ராமநாதசுவாமிக்கு நித்தியபடி சாத்த வேண்டும் என மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஸ்ரீராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமநாதசுவாமிக்கு ஆவுடையார் பொன்கவசத்தை நித்தியபடி சாத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம், தேவராஜ் மகேஷ் ஆகியோர் வாதிட்டனர். ஆவுடையார் பொன் கவசம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தனர். பின்னர் நீதிபதிகள், ஆவுடையார் பொன்கவசம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x