Last Updated : 12 Mar, 2024 07:41 PM

1  

Published : 12 Mar 2024 07:41 PM
Last Updated : 12 Mar 2024 07:41 PM

கோவை காமாட்சிபுரி ஆதீனம் உடல்நலக்குறைவால் மறைவு

கோவை: கோவை ஒண்டிப்புதூர் அருகே, காமாட்சிபுரி ஆதீனம் 51-வது சக்திபீடம் மகாசந்நிதானம் உள்ளது. இங்கு ஆதீனமாக சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் (55) இருந்தார். இவர், உடல்நலக்குறைவால் இன்று (மார்ச் 12) அதிகாலை காலமானார்.

சுவாசக் கோளாறு பாதிப்புக்காக கடந்த 4 மாதங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை பல்லடத்தில் உள்ள கோயில் வளாகத்தில் இருந்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகளுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடன் இருந்தவர்கள் அவரை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

காமாட்சிபுரத்தில் கடந்த 1970-ம் ஆண்டு கந்தசாமி தேவர் - குணவதி தம்பதியருக்கு 5-வது மகனாக பிறந்த சிவலிங்கேஸ்வர சுவாமிகளுக்கு பள்ளிப்படிப்பு முடித்தவுடன் ஆன்மிக எண்ணம் அதிகரித்தது. சிரவை ஆதீனத்தின் 3-வது குரு மகாசந்நிதானமாக இருந்த சுந்தர சுவாமிகளிடம் பயிற்சி பெற்று தீட்சை பெற்றார். 20 வயதில் துறவியான அவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் நொய்யல் ஆற்றங்கரையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிலையினை கண்டெடுத்த அவர், காமாட்சிபுரத்தில் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலை அமைத்தார்.

பின்னர், 51 சக்தி பீடம் காமாட்சிபுரி ஆதீனத்தை தொடங்கினார். பின்னர், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் நவகிரக கோட்டை என்ற பெயரில் மிகப்பெரிய சிவன் ஆலயத்தை கட்டினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் வழங்க வேண்டும் என அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தார். இவரது வேண்டுகோளுக்கு இணங்க, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தங்ககவசம் வழங்கினார்.

சமீபத்தில் நடந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு, பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கிய ஆதீனங்களில் இவரும் ஒருவராவார். தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தியுள்ளார். இவரது மடத்தில் தங்கியிருந்து ஆதரவற்ற ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். கரோனா காலகட்டத்தில் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கோயில் பூசாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் செய்து வந்தார்.

பல்வேறு வெளிநாடுகளுக்குச் ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்ட இவர், பல்வேறு பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆன்மிக எண்ணத்தை அனைவரிடமும் பரவச் செய்தார். இந்தச் சூழலில், முக்தியடைந்த சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் உடல், காமாட்சிபுரி ஆதீன வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கந்தசாமி, இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களும், முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், 18 வகையான திரவியங்களால் அவரது உடலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தொடர்ந்து இன்று மாலை 3 மணிக்கு காமாட்சிபுரம் மடத்தில் அமர்ந்த நிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவைத் தொடர்ந்து, காமாட்சிபுரி ஆதீன மடத்தின் புதிய ஆதீனமாக ஆனந்தபாரதி தேர்வு செய்யப்பட்டார்.

முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் - முதல்வர் ஸ்டாலின் : மேற்கு மண்டலத்தில் ஆன்மிக வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டுக்காக பாடுபட்ட அப்பழுக்கற்ற துறவியான சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்திய பெருமைக்குரியவர். தமிழைப் பரப்புவதை தனது வாழ்நாள் பணியாக மேற்கொண்டு வந்தார். பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து தமிழை பரப்பி வந்த அவர், பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களை தங்க வைத்து அவர்கள் கல்வி கற்கவும் உதவி புரிந்து வந்தார். தொண்டிலும், துறவிலும் சிறந்து விளங்கிய சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் மறைவு தமிழ் சமயநெறிக்கும், தமிழ் வழிபாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை: ஆன்மிகத்துக்காகவும், இந்துசமுதாய ஒற்றுமைக்காகவும் அரும்பாடுபட்டவர் சிவலிங்கேஸ்வர சுவாமிகள். இந்துக்களுக்கு எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும், உடனடியாக களத்தில் இறங்கி குரல் கொடுப்பவர். தமிழகத்தில் பல கோயில்களின் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தியவர். இந்துமுன்னணி இயக்கத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் பங்கேற்று இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்திடுவார். பலமுகங்களை கொண்ட, சிவலிங்கேஸ்வர சுவாமிகளின் மறைவு இந்து சமுதாயத்துக்கு பேரிழப்பாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x