Published : 12 Mar 2024 03:42 PM
Last Updated : 12 Mar 2024 03:42 PM
மதுரை: மதுரை தொகுதியில் கடைசி நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் திமுக, அதிமுக கூட்டணி முகாம்களில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த சட்டமன்ற தேர்தல் வரை ஈபிஎஸ் - ஓபிஎஸ் என்ற இரட்டை தலைமையுடனே மட்டுமே அதிமுக தேர்தலை சந்தித்து வந்தது. தற்போதுதான் அதிமுக முதல் முறையாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.பழனிசாமி தலைமையில் ஒற்றைத் தலைமையுடன் மக்களவைத் தேர்தலை சந்திக்க உள்ளது. இந்தத் தேர்தலில் பெறும் வெற்றி, வாக்கு சதவீதத்தை வைத்துதான், அவரை அதிமுக தொண்டர்கள் முழுமையான ஒற்றைத் தலைமையாக ஏற்றுக் கொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது. அதனால், கே.பழனிசாமி, அதிமுகவை கவுரவமான தொகுதிகளில் வெற்றி பெற வைப்பதற்காக தேர்தல் வியூகம் அமைத்து வருவது தெரிகிறது.
ஆனால், அதிமுகவுக்கு சவாலாக தென்மாவட்டங்களில் அக்கட்சியை தோற்கடிப்பதையே முதல் நோக்கமாக கொண்டு பாஜகவுடன் கைகோத்துக் கொண்டு போட்டியிட உள்ள டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறார்கள். இவர்களை சமாளித்து அதிமுகவை எப்படி கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறவைப்பது என்று கே.பழனிசாமி கட்சியினருடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
அதனால், ஓ.பன்னீர்செல்வத்தை தேனியில் அவரது மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தொகுதிக்குள்ளேயே முடக்க அவரது மகனுக்கு அவருக்கு எதிராக ஆர்.பி.உதயகுமார் ஆதரவாளரான பணபலமும், ஓரளவு செல்வாக்குமுள்ள மகேந்திரனை களம் இறக்க ஏற்கெனவே திட்டமிட்டு வைத்துள்ளனர். அதற்கான தேர்தல் பணிகளை ஆர்.பி.உதயகுமார் கடந்த 2 மாதங்களாக செய்து வருகிறார்.
மகன் ரவீந்திரநாத்தை தோற்கடித்தாலே ஓ.பன்னீர்செலவத்தை தோற்கடித்ததாக அர்த்தமாகிவிடும். அதன் மூலம் இந்த தேர்தலோடு ஓ.பன்னீரசெல்வத்தை அரசியலை விட்டு அகற்றலாம் என கே.பழனிசாமியும், அவரது ஆரதவாளர்களும் திட்டமிட்டுள்ளனர். அதனால், ஓ.பன்னீர்செல்வம், தனது மகனை தொகுதி மாற்றிப் போட்டியிட வைக்கலமா என ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. தேனி தொகுதியுடன் சேர்த்து ராமநாதபுரம், மதுரை ஆகிய தொகுதிகளையும் சேர்த்து அவர் மகனுக்காக பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
மதுரையில் பாஜக துணையுடன் போட்டியிட்டால் சவுராஷ்டிரா மக்கள் ஆதரவையும், அவரது கட்சி மாநகர மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் சமூகத்தைச் சேர்ந்த யாதவர் சமூகம், தனது சமூகமான முக்குலத்தோர் ஆகியோர் வாக்குகளையும் எளிதாக பெறலாம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் கணக்குப் போட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக மதுரையில் டாக்டர் சரவணனைதான் வேட்பாளராக களம் இறக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் மீது ஏற்கெனவே பல கட்சிகளுக்கு சென்று வந்தவர் என்பதோடு அவர் மீது இன்னும் அதிமுக தொண்டர்களுக்கே பெரிய பிடிப்பு இல்லை.
அதனால், அதிமுக தொண்டர்கள் கண்டிப்பாக தனது மகனுக்கே ஓட்டுப்போட வாய்ப்புள்ளதாகவும், திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சியே போட்டியிடுவதால் வெற்றி வாய்ப்பு உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் நம்புவதாக கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் மகன் களம் இறக்கினால், கடந்த மக்களவைத் தேர்தலில் தேனியை போல் மதுரையிலும் வாக்காளர்களுக்கு பெரும் கவனிப்பு இருக்கலாம் என்பதால் திமுக -அதிமுக முகாம்களில் திடீர் கலக்கமும், பரபரப்பும் தொற்றியுள்ளது.
இதுகுறித்து ஓபிஎஸ் அணி முக்கிய நிர்வாகியிடம் பேசியபோது, ''தேனி, ராமநாதபுரம், மதுரை ஆகிய மூன்று தொகுதிகளில் ரவீந்திரநாத்தை போட்டியிட வைக்க ஆலோசித்தது உண்மைதான். ஆனால், மதுரையில் போட்டியிடுவதை இன்னும் உறுதி செய்யவில்லை. நாங்களும் ஓ.பன்னீர்செல்வத்திடம், ரவீந்திநாத்தை மதுரையில் போட்டியிட வைக்க வலியுறுத்தி உள்ளோம்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT