Published : 12 Mar 2024 02:07 PM
Last Updated : 12 Mar 2024 02:07 PM

“தேர்தலுக்காக மக்களை பிளவுபடுத்துகிறது மத்திய அரசு” - கமல்ஹாசன் @ சிஏஏ

கமல்ஹாசன்

சென்னை: மத்திய அரசு தேர்தலுக்காக பொதுமக்களை பிளவுபடுத்தி இறையாண்மையை சிதைக்க துடிக்கிறது என குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கண்டனத்தை வெளிபடுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் வென்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசு, குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்களைப் பிளவுபடுத்தி, இறையாண்மையைச் சிதைக்கத் துடிப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிவைத்து 2019-ல் நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தபோதே, மக்கள் நீதி மய்யம் கடுமையாக எதிர்த்தது. இதை எதிர்த்து தமிழகத்தில் முதல்முதலாக உச்ச நீதிமன்றத்தை நாடியதும் மநீம-தான். ஒரு சட்டத்தை எல்லாக் கோணங்களிலும் சரிபார்த்த பின்னரே, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், அவசரம் அவசரமாக தாக்கல் செய்துவிட்டு, 4 ஆண்டுகள் காலம் கடத்தி, தேர்தல் தேதி அறிவிக்க உள்ள சில நாட்களுக்கு முன் அமல்படுத்துவது, பாஜகவின் உள்நோக்கத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

ஒருவேளை மீண்டும் பாஜக ஆட்சி அமையுமானால், என்ன மாதிரியான இந்தியாவை உருவாக்கப் போகிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம். தொடர் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் கண்டுகொள்ளாமல், இஸ்லாமிய சகோதரர்கள் ரமலான் நோன்பு தொடங்கியிருக்கும் முதல் நாளில், இந்த அவலத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகத்தான் இந்தச் சட்டம் என்ற கூற்று உண்மையானால், பல்வேறு இன்னல்களைச் சந்தித்த இலங்கைத் தமிழர்களைப் பட்டியலில் சேர்க்காதது ஏன்?

இந்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில சட்டப்பேரவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றையெல்லாம் மீறி குடியுரிமைச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. மக்களை மதம், மொழி, இனத்தால் பிளவுபடுத்தும் முயற்சிகளை முறியடிப்போம். தேசம் காப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x