Published : 12 Mar 2024 01:31 PM
Last Updated : 12 Mar 2024 01:31 PM

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அதன் நிறுவனர் சரத்குமார் இன்று (மார்ச் 12) பாஜகவில் இணைத்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது கட்சியினை பாஜகவுடன் இணைத்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் சரத்குமார் பாஜகவுடன் தனது கட்சியை இணைத்துள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது.

இணைப்புக்குப் பின்னர் பேசிய சரத்குமார், “பாஜகவில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. மாறாக மக்கள் பணிக்கான தொடக்கம். நாங்கள் மக்கள் பணியில் தொடர்கிறோம். இது நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு, நாட்டின் வளர்ச்சிக்காகவும், வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தே முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார். மேலும் பிரதமர் மோடி காமராஜரைப் போல ஆட்சி செலுத்துவதாக புகழாரம் சூட்டினார்.

முன்னதாகப் பேசிய அண்ணாமலை, “சரத்குமார் தேசியத்துக்கு தேவைப்படுகிறார். அவரை சிறிய வட்டத்துக்குள் அடைத்துவைக்கக் கூடாது” என்று கூறி இணைப்பை வரவேற்றார்.

திமுக, அதிமுக, சமக...சரத்குமார் தனது அரசியல் பயணத்தை திமுக கூட்டணியில் தொடங்கினார். பின்னர் அதிமுகவில் சேர்ந்தார். அதிமுகவிலிருந்து விலகி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் கடந்த ஆகஸ்ட் 31, 2007-ல் தொடங்கினார். இக்கட்சி 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் ஏ. நாராயணனும் வெற்றி பெற்றனர். அதன் பின்னர் உட்கட்சிப் பூசல்களால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் வரவிருக்கும் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து சரத்குமார் களம் காண்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரகசியமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி அவர் பாஜகவில் தனது கட்சியை இணைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x