Published : 12 Mar 2024 11:36 AM
Last Updated : 12 Mar 2024 11:36 AM
புதுச்சேரி: “மத்திய அரசுத் திட்டங்களை அந்தந்த மாநில மொழிகளில் பெயர் மாற்றம் செய்தால் மக்களிடம் சென்றடைகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் பல திட்டங்கள் ஒரு மாநிலத்துக்கு கிடைக்கும். அதற்கு புதுச்சேரி ஓர் உதாரணம்” என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொள்ளும் ‘ஒரு நிலையம் ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ் புதுச்சேரி ரயில் நிலையத்தில் அரங்கம் அமைக்கும் நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று (செவ்வாய்க்கிழமை) பங்கேற்றார்.
அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: காக்கிநாடா எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு வரை வருகிறது. தற்போது கோரிக்கை வைத்து, புதுச்சேரி வரை வரத்தொடங்கியுள்ளது. பல ரயில்கள் புதுச்சேரிக்கு கிடைத்துள்ளன. டவுள் என்ஜின் சர்க்கார் இங்கு நடப்பதால் பல என்ஜின்கள் இங்கு வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் பல திட்டங்கள் ஒரு மாநிலத்துக்கு கிடைக்கும். அதற்கு புதுச்சேரி ஓர் உதாரணம். புதுச்சேரிக்கு கிடைத்த மத்திய அரசு திட்டங்கள் 400 சதவீதம் அதிகரித்துள்ளது.
பல மத்திய அரசு திட்டங்கள் இந்தியில் இருக்கின்றன. அவற்றை அந்தந்த மாநில மொழிகளில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அனைவருக்கும் கல்வி, ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்,செல்வமகள் சேமிப்பு திட்டம் என்பதுபோல் இந்தியில் உள்ள பெயர்களை தமிழில் மொழி பெயர்த்துச் சொல்ல வேண்டும். தமிழில் மொழிபெயர்ப்பதால் அது மக்களிடம் சென்றடைகிறது. அதற்கு உதாரணம் செல்வமகள் சேமிப்பு திட்டம். இதில் இந்திய அளவில் அதிகளவு சேமிக்கும் சாதனையை தமிழகம், புதுச்சேரி புரிந்துள்ளது. ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ நிகழ்வில் தமிழில் அச்சிட்டு தருகிறார்கள், அரசும் இதற்கு முயற்சி எடுக்கிறார்கள். இவ்வாறு தமிழிசை பேசினார்.
அதையடுத்து அமைச்சர் சாய் சரவணன் குமார் பேசுகையில், “ரயில்வே பயன்பாடு புதுச்சேரியில் அதிகரித்து வருகிறது. தமிழகம், வடமாநிலங்களில் பயன்பாடு அதிகளவு உள்ளது. தற்போது காக்கிநாடா, ஏனாம் வரை செல்ல உதவுவது சிறப்பு” என்றார்.
திருச்சி கோட்ட ரயில்வே பொதுமேலாளர் அன்பழகன், முதன்மை நிதி ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் காணொலியில் பிரதமர் மோடி உரையாற்றுவது ஒளிபரப்பானது. அதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தன.
பின்னர் காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரயிலை ஆளுநர் தமிழிசை, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, அமைச்சர் சாய் சரவணன் குமார் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.
பின்னர் ரயில் மேடையிலிருந்து நுழைவாயில் வரை ஆட்டோ கொண்டு வரப்பட்டு ஆளுநர் தமிழிசை பள்ளி மாணவிகளுடன் சென்றார். ரயில் நிலையத்திலுள்ள ‘ஒரு நிலையம் ஒரு அரங்கையும்’ திறந்தார். அங்கே சுடுமண் சிற்பங்கள், பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது. பொம்மைக் கடையில் ஒரு பொம்மையை பணம் கொடுத்து ஆளுநர் வாங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT