Published : 20 Feb 2018 02:13 PM
Last Updated : 20 Feb 2018 02:13 PM
கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் திருப்பலி நடைபெறும் என யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் பிப்ரவரி 23,24 ஆகிய இரு நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவில் இந்தியாவிலிருந்து பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அழைப்பு விடுத்தார்.
இந்த அழைப்பினை ஏற்று ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பாக ராமேஸ்வரத்திலிருந்து இந்திய பக்தர்கள் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக மீன்வளத்துறை, காவல்துறை, இந்திய கடற்படை, இந்தியக் கடலோர பாதுகாப்பு படை மற்றும் சுங்கத் துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மீனவர்கள் 4நாட்கள்கடலுக்குச்செல்லதடை
திருவிழாவை முன்னிட்டு அந்நியர் ஊடுருவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்திய மற்றும் இலங்கை கடற்படையினர் சர்வதேச எல்லைப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக பிப்ரவரி 21 முதல் பிப்ரவரி 24 வரையிலும் ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களுக்கு படகுகளுக்கு கடலுக்குச் செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்பட மாட்டாது என ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராமேஸ்வரத்தில் உள்ள கச்சத்தீவு யாத்திரைக்கான ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமியின் தலைமையின் கீழ் ஆண்கள் 1,693 பெண்கள் 357 குழந்தைகள் 53 என மொத்தம் 2,103 பக்தர்கள் 62 விசைப்படகுகளில் செல்வதற்காகப் பதிவு செய்துள்ளனர்.
கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா குறித்து யாழ்ப்பாண மாவட்ட ஆட்சியர் வேதநாயகம் செய்தியளார்களிடம் கூறியதாவது:
பிப்ரவரி 23ல் துவங்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் 6,500க்கும் மேற்பட்டோர் இலங்கையிலிருந்து கலந்து கொள்வார்கள். இந்தியாவிலிருந்து 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
கச்சத்தீவில் திருவிழாவின் போது குடிதண்ணீர், மருத்துவம், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரும் பொறுப்பினை இலங்கைக் கடற்படையினர் செய்து வருகின்றனர். கச்சத்தீவு திருவிழாவிற்காக யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரிலிருந்து படகுத்துறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழா திருப்பலி தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடைபெறும் என்றார்.
இந்த ஆண்டு இலங்கையின் சிங்கள மக்களும் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் அதிகளவில் கலந்து கொள்வதால் சிங்கள மொழியில் முதன் முதலாக திருப்பலி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT