Published : 11 Mar 2024 03:36 PM
Last Updated : 11 Mar 2024 03:36 PM
காரைக்கால்: காரைக்காலில் போலீஸாரின் நடவடிக்கையால், விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டமானது சாலை மறியலாக மாறியது. விவசாயிகளை வலுக்கட்டாயமாக போலீஸார் கைது செய்தபோது, இரு தரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கடந்த 2020-21-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதில் விடுபட்ட 435 விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு முன்னர் புதுச்சேரி முதல்வர் சட்டப் பேரவையில் அறிவித்த கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடிக்கான அரசாணை உடனடியாக வெளியிட வேண்டும். கடநத ஆண்டுக்கான பருத்தி பயிருக்கு உரிய காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில், காரைக்கால் மாவட்ட கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலகம் முன்பு இன்று (மார்ச் 11) காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் ஏ.வி.சுப்ரமணியன், ஆர்.கமலக் கண்ணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.பி.சந்திர மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தமீம், மாநிலக் குழு உறுப்பினர் அ.வின்சென்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள், விவசாய சங்கங்களைச் சேர்ந்தோர் உள்ளிட்ட சுமார் 100 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டம் தொடங்கிய நிலையில், காரைக்கால் நகர போலீஸார் ஒலி பெருக்கி வைக்க அனுமதி மறுத்தனர். இதனால் போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் நீடித்தது. இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் அனைவரும் எழுந்து வந்து சென்னை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸார் விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைகளைப் பிடித்து இழுத்து கைது செய்ய முற்பட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு, கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. போலீஸார் மன்னிப்பு கேட்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
பாஜகவின் தூண்டுதலால் போலீஸார் இவ்வாறு நடந்து கொள்வதாக, போலீஸாரை கண்டித்து முழக்கம் எழுப்பினர். சிறிது நேரம் பிரச்சினை நீடித்த நிலையில், தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸார் தாக்கியதாக விவசாயிகள் புகார்: காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச்சங்க இணைச் செயலாளர் பி.ஜி.சோமு கூறியது: "உண்ணாவிரதப் போராட்ட இடத்தில் ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் போலீஸார் வந்து வழக்குப் போடப்படும் என மிரட்டியதால் உரிமையாளர் தனது ஒலிப் பெருக்கியை கழட்டி எடுத்துச் சென்றுவிட்டார்.
தங்கள் உரிமைகளுக்காக போராடிய விவசாயிகளிடம் போலீஸார் கடுமையாக நடந்து கொண்டனர். குறிப்பாக, உதவி ஆய்வாளர் ஒருவர் மிகக் கடுமையாக நடந்து கொண்டார். செல்லூரைச் சேர்ந்த விவசாயி பிரேம், விவசாயி எஸ்.எம்.தமீம் ஆகியோரை போலீஸார் தாக்கியதில் பிரேமின் சட்டை கிழிந்துவிட்டது" என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT