Published : 11 Mar 2024 11:04 AM
Last Updated : 11 Mar 2024 11:04 AM
கள நிலவரம் மற்றும் விருப்ப அடிப்படையில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்க திமுக தயாராகியுள்ளது. திமுக அதிக தொகுதிகளில் போட்டியிட முடிவு, காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி குறைப்பு என பலவாறாக வெளியான தகவல்களுக்கு நேற்று முன்தினம் முற்றுப்புள்ளி வைத்தது திமுக.
கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்கும் கடந்தமுறை அளித்த தொகுதிகளையே கொடுத்து, சர்ச்சையின்றி பங்கீட்டை முடித்துள்ளது. கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த பாரி வேந்தரின் ஐஜேகே இம்முறை இல்லை. இதனால் திமுக கூடுதலாக ஒரு தொகுதி என 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
எண்ணிக்கை முக்கியமல்ல; பாஜகவை வீழ்த்தும் எண்ணம் தான் முக்கியம் என்ற அடிப்படையில் இந்த தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. மக்கள் நீதி மய்யத்தை சேர்க்கும் எண்ணத்தில் இருந்த திமுக, அக்கட்சிக்கு மாநிலங்களவை தொகுதியை வழங்கி தன் வசப்படுத்தியுள்ளது.
திமுகவை பொறுத்தவரை ஆளுங்கட்சி என்பதால், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் கள நிலவரத்தை நன்கு அறிந்து வைத்துள்ளது. கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் இந்த இடத்தில் போட்டியிட்டால் வெல்லலாம் என்பதிலும் தீர்க்கமாக உள்ளது. இதனாலேயே, இந்த தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுகவுக்கு வழங்கும் தொகுதிகளில் மாற்றத்தை ஏற்படுத்த திமுக முடிவெடுத்தது.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை கடந்த முறை போட்டியிட்ட நாகை, திருப்பூர் தொகுதிகளே இம்முறையும் வழங்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த முறை போட்டியிட்ட கோவை, மதுரை தொகுதிகளில் கோவை, மக்கள் நீதி மய்யத்துக்கு செல்வதாக இருந்தது. ஆனால், அக்கட்சிக்கு மாநிலங்களவை ஒதுக்கப்பட்டதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அந்த 2 தொகுதிகளும் கிடைத்துவிடும்.
இதுதவிர, கடந்த முறை ஐஜேகே கட்சி போட்டியிட்ட பெரம்பலூர் தொகுதியை இந்த தேர்தலில் திமுகவே தக்க வைத்துள்ளது. எனவே, காங்கிரஸ், மதிமுகவுக்கு தொகுதியை பிரித்து தருவதுதான் திமுக கூட்டணியில் சவாலாக உள்ளது.
மதிமுக கடந்த முறை ஈரோட்டில் போட்டியிட்டது. இந்த முறை, திருச்சி அல்லது விருதுநகரை கேட்கிறது. இந்த 2 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சி வசம் உள்ளவை. இதில் ஒன்றை மதிமுகவுக்கு திமுக பெற்றுத்தந்தால், திமுக வசம் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் விரும்பும் ஒரு தொகுதியை வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதுதவிர, திமுகவில் தொகுதி தேர்தல் கண்காணிப்பு குழு மண்டல வாரியாக நிர்வாகிகளிடம் பேசியபோது, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, ஆரணி உள்ளிட்ட தொகுதிகளின் காங்கிரஸ் எம்பிக்கள் மீது அதிருப்தி தெரிவித்தனர்.
இதை கருத்தில் கொண்டுள்ள திமுக, இந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்து விடக்கூடாது என்பதில் முனைப்புடன் உள்ளது. எனவே, வேட்பாளர்களை மாற்ற வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக, இன்று அல்லது நாளை காங்கிரஸ் கட்சியுடன் பேசி இறுதி முடிவை எடுக்க திமுக திட்டமிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment