Published : 11 Mar 2024 10:36 AM
Last Updated : 11 Mar 2024 10:36 AM
சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவாகிய நிலையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2021-ல் தமிழக காவல் துறை சிறப்பு டிஜிபி-யாக இருந்த ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி. ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், புகார் கொடுக்க முயற்சித்தபோது அதனை செங்கல்பட்டு எஸ்பி-யாக இருந்த கண்ணன் தடுத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ராஜேஷ் தாஸ், கண்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண் எஸ்.பி.யை முறையாகப் புகார் அளிக்கவிடாமல் தடுத்து நிறுத்தியதற்காக, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர் அப்போது கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீட்டிலும் இந்த தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, எப்போது வேண்டுமானாலும் ராஜேஷ் தாஸ் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில் ராஜேஷ் தாஸ் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவரை கைது செய்வதற்காக சென்னை தையூர் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸார் சென்றனர். ஆனால், அவர் அங்கு இல்லை. இதையடுத்து அவர் தலைமறைவானது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வீட்டின் வாயில் காவலாளிகளிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
அவர் தலைமறைவானது உறுதியான நிலையில் அவர் வெளிநாடுகள் தப்பிச் செல்லாமல் இருக்க அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி சார்பில் அளிக்கப்பட்டுள்ள இந்த லுக் அவுட் நோட்டீஸ் குறிப்பாக அனைத்து விமான நிலையங்களிலும்/துறைமுகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...