Published : 11 Mar 2024 10:25 AM
Last Updated : 11 Mar 2024 10:25 AM
திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்? என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விளக்க மளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியபோது, திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என உறுதிபட கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார். இந்நிலையில், திமுகவுடனான கூட்டணியை நேற்று முன்தினம் கமல்ஹாசன் உறுதி செய்தார்.
இந்த செயல் பல்வேறு தரப்பினரிடையே கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. இதுதொடர்பாக கட்சியின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் பன்முகத்தன்மை தான் அதன் தனித்துவம் என நான் நம்புகிறேன். தற்போதைய நிலை என்பது ஒரு அவசரநிலை. இது, தமிழகத்துக்கும் தேசத்துக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும்.
எதிர்வாத சக்திகளுக்கு இது கைகூடி விடக் கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்திருக்கும் முடிவு. இந்த நேரத்தில் எந்த கட்சியில் இருந்தாலும் அனைவருமே சகோதரர்கள் தான். எதிர்க்கட்சியாக இருந்தாலும் என்னுடைய சகோதரர்கள் தான்.
தேச நலனின் முக்கியத்துவம் கருதி நான் சிலவற்றை தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். தேசத்துக்காக நாம் அனைவரும் ஒரே மேடையில் அமர வேண்டும். அது தான் என்னுடைய அரசியல் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT