Published : 11 Mar 2024 01:10 PM
Last Updated : 11 Mar 2024 01:10 PM

சின்னாலகோம்பையில் 3 தலைமுறைகளாக அடிப்படை வசதிகளின்றி அவதி - பழங்குடியின மக்கள் புகார்

குன்னூர்: மூன்று தலைமுறைகளாக சாலை மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தராததால், தேர்தலை புறக்கணிக்கவும், அரசு அடையாள அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளதாக பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்டது பில்லூர் மட்டம். இப்பகுதியின் அருகில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது சின்னாலகோம்பை இருளர் பழங்குடியினர் கிராமம். இங்கு சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தினசரி கூலி வேலை செய்து, தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என பல ஆண்டுகளாக பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: சின்னாலகோம்பை யில் சாலை வசதி இல்லாததால், தினசரி 4 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டிய நிலையுள்ளது. அடர்ந்த வனப்பகுதி வழியாக நடந்து செல்லும்போது, யானை, சிறுத்தை, கரடி போன்ற விலங்குகள் தாக்கி, பலர் உயிரிழந்துள்ளனர். அடர்ந்த வனத்தின் மத்தியில்வசிக்கும் எங்கள் கிராமத்துக்கு இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.

அவசர சிகிச்சைகளுக்காக கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி செல்வோம். இது நாள் வரை எந்த அரசியல் கட்சி தலைவர்களும், எங்களை சந்தித்ததும் இல்லை, குறைகளை கேட்டறிந்ததும் இல்லை. எனவே, வரவுள்ள மக்களவைத் தேர்தலை இருளர் பழங்குடியின மக்கள் புறக்கணிப்பது மட்டுமின்றி, அரசு அடையாள அட்டைகளான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x