Published : 11 Mar 2024 01:31 PM
Last Updated : 11 Mar 2024 01:31 PM
மதுரை: சாலைகளை சீரமைக்க வனத்துறை அனுமதி கிடைப்பதில் 20 ஆண்டுகளாக இழுபறி நீடிப்பதால் சாலை வசதியின்றி தமிழகத்தில் ‘பேச்சில்லா கிராமங்கள்’ உருவாகி வருகின்றன.
சாலை கட்டமைப்பில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம் முன்னிலையில் உள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், மாவட்டச் சாலைகள், ஊராட்சி ஒன்றியச் சாலைகள் முறையாக 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சீரான இடைவெளியில் பராமரிக்கப் படுகின்றன. ஆனால், மலைக்கிராமச் சாலைகள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் வழியாக புழக்கத்தில் உள்ள தார் சாலைகள் உள்ளிட்டவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இந்தச் சாலைகள் வழியாக உள்ள கிராமங்களில்தான் பழங்குடி மக்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள் வசிக்கின்றனர்.
இந்தச் சாலைகளைச் சீரமைக்க, மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி ஒன்றிய அளவில் நிதி ஒதுக்கியும், வனத்துறை அனுமதி கிடைப்பதில்லை. மலைக் கிராமங்கள், வனப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் உள்ள தார் சாலைகளைச் சீரமைக்கவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், மாவட்ட வனத்துறை அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், இவர்கள் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் மலைக் கிராமங்கள், வனப்பகுதியை ஓட்டிய கிராமங்களில் ஏற் கெனவே உள்ள சாலைகளைச் சீரமைக்க கடந்த 20 ஆண்டுகளாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. கல்வி, மருத்துவம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை வசதி முக்கியமானது.
ஆனால், நகர் பகுதிகளுக்கு கிடைப்பதுபோல் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்கு எளிதாக சாலை வசதி இன்னும் கிடைத்தபாடில்லை. இதனால் அந்தக் கிராம மக்கள் அனைத்து வகைகளிலும் பின்தங்கி உள்ளனர். விவசாய விளை பொருட்களைக் கூட விற்பனைக்கு கொண்டு போக முடியவில்லை. ஒரு கட்டத்தில் அந்தக் கிராமங்களில் உள்ள இளைய தலைமுறையினர் கல்வி, வேலை வாய்ப்புக்காக புலம் பெயர்கின் றனர். நாளடைவில் அந்தக் கிராமங்கள் வருவாய்த்துறையின் பட்டியலில் இல்லாமல் போய் விடுகிறது. மக்கள் வசிக்காத இந்த கிராமங்கள் வருவாய்த்துறை பட்டியலில் ‘பேச்சில்லா கிராமங்கள்' என அடையாளப்படுத்தப்படுகின்றன. இப்படி, பல நூறு கிராமங்கள் தமிழகத்தில் பேச்சில்லா கிராமங்களாக மூச்சடங்கிப் போய் உள்ளன.
மதுரை மாவட்டத்தில் சாலை வசதியின்மை உள்ளிட்ட காரணங்களால் டி.கல்லுப்பட்டி அருகே விருதுநகர் செல்லும் வழியில் உள்ள வேலாம்பூர் கிராமம், ஒத்தக்கடை புது தாமரைப்பட்டி அருகே இருக்கும் குண்டாங்கல் கிராமம் பேச்சில்லா கிராமங்களாக மாறியுள்ளன. தற்போது மேலும் பல கிராமங்கள் சாலை வசதியின்றி இதுபோல மாறும் அபாயத்தில் உள்ளன. காரைக்குடி அருகே கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பூங்குடி ஊராட்சி, கீழப்பூங்குடி, மேலப்பூங்குடி, கீழப் புதுவட்டி, மேல புதுவட்டி கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளைச் சீரமைக்க கடந்த 20 ஆண்டுகளாக வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் இந்தக் கிராம மக்கள் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் இதுபோன்று 20 சாலைகள், நிதி ஒதுக்கீடு இருந்தும் வனத்துறை அனுமதியின்றி பராமரிக்கப்படவில்லை. இது குறித்து பழங்குடி மக்கள் சேவகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான தன்ராஜ் கூறியதாவது: வனவுரிமைச் சட்டம் 2006-ன் படி அடர் வனப்பகுதியில் மலை கிராம மக்களின் அடிப்படை வசதிகளுக்காக இரண்டரை ஏக்கர் வரை நிலம் ஒதுக்கலாம் என்று கூறுகிறது. இதன் அடிப்படையில் சாலை வசதி இல்லாத ஆனைமலையில் ரூ.2.80 கோடியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. வனப்பகுதி இல்லாத, அதன் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஏற்கெனவே உள்ள தார் சாலையை சீரமைக்க தமிழக வனத்துறையினரே ஒப்புதல் கொடுக்கலாம்.
புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்றால் மட்டுமே, மாநில அரசின் பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திடம் வனத் துறையினர் ஒப்புதலைப் பெற வேண்டும். கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற வளமான சுற்றுலா மூலம் வருவாய் வரும் ஊர்களுக்கு மட்டும் எவ்வளவு கடினமாக இருந்தாலும், தாமதமின்றி சாலை அமைக்கப்படுகிறது. ஆனால், கிராமங் களில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளைச் சீரமைக்க பல ஆண்டுகள் போராட வேண்டி உள்ளது.
ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை இணைந்து ஒரு குழுவை உருவாக்கி அவர்கள் ஆலோசனைப்படி மக்கள் புழக்கத்தில் உள்ள சாலைகளை மீண்டும் புதுப்பிக்க அனுமதி வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் பேச்சில்லா கிராமங்கள் உருவாவதைத் தடுக்கலாம். ஆனால், அதற்கு வழியில்லாத பட்சத்தில் கிராம மக்கள் ஒருங்கிணைந்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நியாயம் பெறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்று கூறினார்.
வனத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘காடுகளில் உள்ள மலைக்கிராமங்களுக்கு சாலை அமைக்கவும், ஏற்கெனவே சாலை வசதி உள்ள வனப்பகுதி வழியாக சமதள கிராமங்களுக்கு செல்வதற்கான சாலையைச் சீரமைக்கவும், வனத்துறை அனுமதி அவசியம்.
அடர்வனம் வழியாகச் செல்லும் சாலைகளுக்கு மத்திய அரசின் வனத்துறை அனுமதி வேண்டும். அந்த அனுமதி கிடைக்கத் தேவையான ஆவணங்கள் வழங்க வேண்டும். அவ்வாறு முறையாக விண்ணப்பிக்காவிட்டால் தாமதம் ஏற்படலாம். சாலை அமைக்க அனுமதி தரமாட்டார்கள் என்று சொல்வது சரியல்ல என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT